இந்த எரிபொருள் ஒதுக்கீடு மக்களின் அன்றாடத் தேவைக்குப் போதுமானதல்ல, ஆகவே இதனை “விஞ்ஞான பூர்வமான” முறையில் திருத்தியமைக்க வேண்டும் ; சஜித் கோரிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் இலங்கையின் எரிபொருள் கையிருப்பு குறித்த வெளிப்படைத்தன்மை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் இன்று அரசாங்கத்திடம் கேள்விகளை முன்வைத்தார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மார்ச் மாத ஆரம்பத்தில் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது, நாட்டில் பெற்றோல் 27 நாட்களுக்கும், டீசல் 33 நாட்களுக்கும் போதுமான கையிருப்பு உள்ளதாகத் தெரிவித்திருந்தார். இருப்பினும் ஜனாதிபதியின் அறிவிப்பு வெளியாகி 7 நாட்களில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதை எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
மார்ச் 9 ஆம் திபதி நள்ளிரவு முதல் பெற்றோல் (92) லீட்டர் ஒன்றுக்கு 24 ரூபாவினாலும், டீசல் 24 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டது.
தற்போதைய மதிப்பீடுகளின்படி , ஏப்ரல் இறுதி வரை போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளதாக அரசாங்கம் கூறினாலும், போர் தீவிரமடைந்தால் விநியோகச் சங்கிலி பாதிக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது.
எதிர்பாராத தேவைகள் மற்றும் பதுக்கல் நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக மார்ச் 15, 2026 முதல் மீண்டும் QR குறியீடு (Fuel Pass) முறை அமுல்படுத்தப்பட்டுள்ளது. சிற்றுந்துகளுக்கு வாராந்தம் 15 லீட்டர் மற்றும் உந்துருள்ளிகளுக்கு 5 லீட்டர் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒதுக்கீடு மக்களின் அன்றாடத் தேவைக்குப் போதுமானதல்ல என்றும், இதனை “விஞ்ஞான பூர்வமான” முறையில் திருத்தியமைக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச எரிசக்தி முகவரகம் (International Energy Agency – IEA) போர்ச் சூழலைக் கருத்தில் கொண்டு சந்தையை நிலைப்படுத்த 400 மில்லியன் பீப்பாய் எண்ணெயை விடுவிக்க மார்ச் 11 அன்று உடன்பாடு எட்டியுள்ளது. இந்த உலகளாவிய எண்ணெய் விடுவிப்பு மூலம் இலங்கைக்குத் தேவையான விநியோகத்தைப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதா? என எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அமெரிக்கா ரஷ்யாவிற்கு விதித்துள்ள தடைகளில் வழங்கப்பட்டுள்ள 30 நாள் தற்காலிக சலுகையைப் பயன்படுத்தி, ரஷ்யாவிடம் இருந்து மசகு எண்ணெயைப் பெற விசேட திட்டங்கள் ஏதும் உள்ளனவா என்பதையும் அவர் வினவினார்.
உலக சந்தையில் எண்ணெய் விலை 20% – 30% வரை அதிகரித்தால், அது இலங்கையின் பணவீக்கத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இத்தருணத்தில் எண்ணெய் மீதான VAT உள்ளிட்ட வரிகளை நீக்கி, துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் விலையிலேயே மக்களுக்கு எரிபொருளை வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்தியாவசிய சேவைகளான மின்உற்பத்தி, சுகாதாரம் மற்றும் போக்குவரத்து ஆகியவற்றிற்குத் தடையின்றி எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்ய “தேசிய முன்னுரிமை பொறிமுறை” அவசியமென அவர் வலியுறுத்தினார்.



