எடுக்க வேண்டிய தீர்மானங்களை சரியான நேரத்தில் எடுத்து நிலைமையைக் கையாண்டு வருகிறோம்..

உலக நெருக்கடியை அரசாங்கம் மிக நெருக்கமாக அவதானித்து வருவதுடன், எடுக்க வேண்டிய தீர்மானங்களை சரியான நேரத்தில் எடுத்து நிலைமையைக் கையாண்டு வருவதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அங்கு பிரதமர் மேலும் கூறியதாவது:
“இன்று எமது எரிசக்தித் துறை பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இது தொடர்ச்சியாக மாற்றமடைந்து வரும், எதிர்வு கூற முடியாத ஒரு நிலைமையாகும். நாம் இந்த உலக நெருக்கடியை மிக நெருக்கமாக அவதானித்து வருவதுடன், எடுக்க வேண்டிய தீர்மானங்களைச் சரியான நேரத்தில் எடுத்து முகாமைத்துவம் செய்து வருகிறோம். இது நாம் கூட்டுப் பொறுப்புடன் எதிர்கொள்ள வேண்டிய ஒரு நிலைமையாகும்.
அதற்காக அரச சேவை, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைத்து அரசியல்வாதிகள் மட்டுமன்றி, பொதுமக்கள் மற்றும் தனியார் துறையினரும் ஒன்றிணைந்து இதனை எதிர்கொள்ள வேண்டும்” எனப் பிரதமர் தெரிவித்தார்.



