உலக சந்தையில் எரிபொருள் விலை ஒரு டொலரால் அதிகரிக்கும் போது, நாட்டில் எரிபொருள் விலை சுமார் இரண்டு ரூபாவால் அதிகரிக்கும்..

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பினைத் தொடர்ந்து, உள்நாட்டு சந்தையில் எரிபொருள் விலை தீர்மானிக்கப்படும் விதம் மற்றும் அதன் தாக்கம் குறித்து ஜனாதிபதி அணுர குமார திஸாநாயக்க பாராளுமன்றத்தில் விசேட விளக்கமளித்தார்.
உலக சந்தையில் எண்ணெய் விலை ஒரு டொலரால் அதிகரிக்கும் போது, நாட்டில் எண்ணெய் விலை சுமார் இரண்டு ரூபாவால் அதிகரிப்பதாக ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.
அதன்படி, அண்மையில் பெட்ரோல் பீப்பாய் ஒன்றின் விலை 90 டொலரிலிருந்து 139 டொலர் வரை 49 டொலரால் அதிகரித்துள்ளதாகவும், டீசல் பீப்பாய் ஒன்றின் விலை 114 டொலரிலிருந்து 198 டொலர் வரை 84 டொலரால் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்த அவர், இந்த இரண்டு பெறுமதிகளையும் பெருக்குவதன் மூலம் எரிபொருள் விலையைக் கணக்கிட முடியும் என்றும் கூறினார்.
(ஜனாதிபதி குறிப்பிடும் சூத்திரத்தின்படி, பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 98 ரூபாவினாலும், டீசல் லீற்றர் ஒன்றின் விலை 168 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட வேண்டும்.)
இந்த நிலைமை உள்நாட்டு சந்தையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், குறிப்பாக டீசல் விலை உயர்வில் இந்த நிலைமை பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
எண்ணெய் விலை உயர்வுக்கு மேலதிகமாக, எரிபொருள் இறக்குமதியின் போது செலுத்த வேண்டிய ‘பிரீமியம்’ (Premium) கட்டணமும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக ஜனாதிபதி இங்கு வெளிப்படுத்தினார். முன்னதாக 2.5 டொலராக இருந்த நீண்டகால டெண்டர் பிரீமியம் கட்டணம், தற்போது 12 டொலர் வரையிலும், சில சந்தர்ப்பங்களில் 31, 35 மற்றும் 45 டொலர் போன்ற உயர் மட்டங்களுக்கும் அதிகரித்துள்ளது. பல்வேறு நாடுகளுக்கும் நிறுவனங்களுக்கும் இடையிலான போட்டித்தன்மை மற்றும் பாதுகாப்பு உத்தரவாதங்கள் தொடர்பான தேவைகளே இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
உலக சந்தையில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கையில் எரிபொருள் விலை ஒப்பீட்டளவில் முகாமைத்துவம் செய்யப்பட்ட மட்டத்திலேயே அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
உலகில் பல்வேறு நாடுகள் 6 சதவீதத்திலிருந்து 150 சதவீதம் வரையான உயர் மட்டங்களில் எண்ணெய் விலையை அதிகரித்துள்ள நிலையில், இலங்கையின் சராசரி விலை அதிகரிப்பு 108 சதவீதமாகப் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஐக்கிய அரபு இராச்சியம் போன்ற எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளைத் தவிர, ஏனைய நாடுகள் இலங்கையை விட அதிக சதவீதத்தினால் விலையேற்றத்தை மேற்கொண்டுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.



