தடையற்ற மின்சாரத்தை வழங்குவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம் – அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ

அரசாங்கத்தின் பிரதான நோக்கம் தடையற்ற எரிசக்தி விநியோகத்தை உறுதிப்படுத்துவதாகும் என்றும், அதற்காக எடுக்கப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுக்கும் என்றும் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இன்று (20) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர்,
உலக சந்தையில் அனைத்து பொருட்களின் விலைகளும் உயர்ந்துள்ளதால், நிலக்கரி கொள்வனவின் போதும் அதிக விலையை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
அதன்படி, சாதாரண காலங்களில் மேற்கொள்ளப்படும் கொள்வனவுகளுக்காக செலுத்தப்படும் விலைகளை விட தற்போதைய விலைகள் மாற்றமடைந்துள்ளதாகவும், இந்த நிலைமைகளைக் கருத்திற்கொண்டே எதிர்கால தீர்மானங்கள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ:
“எமது பிரதான இலக்கு தடையின்றி மின்சாரத்தை வழங்குவதாகும். அதற்காக எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் பின்பற்றி வருகிறோம். ஒவ்வொரு மாதமும் மின்சார நுகர்வில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. சில மாதங்களில் மின்சார நுகர்வு அதிகமாக இருக்கும். நிலக்கரியின் தரம் தொடர்பான சில அறிக்கைகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன, அவை குறித்து நாங்கள் ஆராய்வோம். எவ்வாறாயினும், எமது எதிர்பார்ப்பு தடையற்ற மின்சாரத்தை வழங்குவதாகும். உலக சந்தையில் நிலக்கரி உட்பட அனைத்து பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன. மறுபுறம், இவ்வாறானதொரு சூழ்நிலையில் நாம் கோரும் ஒப்பந்தப் புள்ளிகளின் (Tenders) போது சாதாரண காலங்களில் கிடைக்கும் விலைகள் கிடைப்பதில்லை. இவற்றைக் கருத்திற்கொண்டே எரிபொருள் விலையாக இருக்கட்டும், மின்சாரக் கட்டணமாக இருக்கட்டும் அனைத்தும் தீர்மானிக்கப்பட வேண்டியுள்ளது.”



