இஸ்ரேலில் ஈரான் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து ஈரானுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வேண்டுகோள்

இஸ்ரேலில் ஈரான் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து ஈரானுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் ஜெருசலேம், அராத் மற்றும் டிமோனா நகரங்களில் கடந்த 2 நாள்களாக ஈரான் தொடர் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.
தாக்குதலில் பாதிக்கப்பட்ட அராத் நகரை இன்று பார்வையிட்ட இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, “ஈரான் ஒட்டுமொத்த உலகிற்கும் அச்சுறுத்தலானது என்பதற்கு ஆதாரம் வேண்டுமானால், கடந்த 48 மணிநேரமே அதற்கு சாட்சி. பொதுமக்கள் வாழும் பகுதியைக் குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனை, அவர்கள் ஆயுதமாக பயன்படுத்துகின்றனர்.
அதிர்ஷ்டவசமாக, மக்களில் யாரும் கொல்லப்படவில்லை. அதிர்ஷ்டத்தால் மட்டுமே அவர்கள் பலியாவது தடுக்கப்பட்டுள்ளது. ஆனால், பொதுமக்களைக் கொல்வதே ஈரானின் நோக்கம். ஜெருசலேமின் புனிதத் தலங்களின் மேற்குச் சுவர், புனித கல்லறை தேவாலயம் மற்றும் அல்-அக்ஸா மசூதி ஆகியவற்றிற்கு மிக அருகில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. நல்லவேளை யாரும் கொல்லப்படவில்லை.
ஈரான் சர்வதேச கடல் வழிப் பாதையை அடைத்து எரிசக்தி தட்டுப்பாட்டை ஏற்படுத்தி உலக நாடுகளை மிரட்டி வருகின்றனர். உலக நாடுகளை அச்சுறுத்தும் ஈரானைத் தடுத்து நிறுத்த இதைவிட என்ன ஆதாரங்கள் வேண்டும்? இஸ்ரேலும், அமெரிக்காவும் உலக நாடுகளுக்காக இணைந்துள்ளோம். அதேபோல, உலக நாடுகளின் தலைவர்களும் எங்களுடன் இணையவேண்டும்.
சில தலைவர்கள் அத்தகைய முடிவை எடுத்திருப்பது எனக்கு மகிழ்ச்சி. மேலும், பலர் இதில் இணைய வேண்டும். மதவெறி பிடித்த ஈரானின் பயங்கரவாத ஆட்சியை சர்வதேச நாடுகள் எதிர்க்க வேண்டும் என்று ஜனாதிபதி ட்ரம்ப் கூறியது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பாதுகாப்பிற்காக மட்டுமல்ல. ஒட்டுமொத்த உலகின் பாதுகாப்பிற்கானது. உலக நாடுகள் செயல்பட வேண்டிய நேரம் இது ” என்று நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்



