News

இஸ்ரேலிலுள்ள அமெரிக்க பிரஜைகள் தரைவழிப் பாதைகள் ஊடாக வெளியேறுமாறு அமெரிக்கத் தூதரகம் அறிவிப்பு

இஸ்ரேலிலுள்ள அமெரிக்க பிரஜைகள் தரைவழிப் பாதைகள் ஊடாக வெளியேறுமாறு அமெரிக்கத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளதுடன், பயணச் சவால்களுக்கு மத்தியில் ஜோர்தானுக்குச் செல்வதற்கு பேருந்து வசதிகளையும் வழங்கியுள்ளது.


தற்போதைய சூழலில் இஸ்ரேலில் இருந்து வெளியேறுவதற்கான உடனடி வழிகள் குறைவாக இருப்பதாலும், வெளியேற்றத்தை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாலும், அமெரிக்கப் பிரஜைகள் தரைவழிப் பாதைகளைப் பயன்படுத்துவது குறித்து பரிசீலிக்குமாறு ஜெருசலேமிலுள்ள அமெரிக்கத் தூதரகம் ஆலோசனைகளை வழங்கியுள்ளது.


தூதரகத்தின் உத்தியோகபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட அறிக்கையில், தற்போதைய நிலையில் இஸ்ரேலில் இருந்து வெளியேறுவதற்கான அதிவேக வழி, அண்டை நாடுகளான எகிப்து மற்றும் ஜோர்தானுக்கான தரைவழி எல்லைக் கடவைகள் ஊடாகச் செல்வதே என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


எகிப்தின் ஷார்ம் எல்-ஷேக் (Sharm el-Sheikh) மற்றும் கெய்ரோ (Cairo), அத்துடன் ஜோர்தானின் அம்மான் (Amman) ஆகிய விமான நிலையங்களில் இருந்து வணிக ரீதியான விமானங்கள் இன்னும் இயங்கி வருவதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் மார்ச் 23 முதல் இஸ்ரேலில் உள்ள அமெரிக்கப் பிரஜைகளை அம்மானில் உள்ள குயின் அலியா சர்வதேச விமான நிலையத்திற்கு (Queen Alia International Airport) அழைத்துச் செல்வதற்கு பேருந்து சேவைகளை ஏற்பாடு செய்து வருவதாகத் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.


இந்த “தரைவழி வெளியேற்ற” திட்டத்தின் கீழ், வெளியேறுவதற்கு உதவி தேவைப்படுபவர்களுக்கு ஜோர்தான் நதி/ஷேக் ஹுசைன் (Sheikh Hussein) எல்லைக் கடவை ஊடாக பேருந்து போக்குவரத்து வசதிகள் வழங்கப்படுகின்றன.


இந்தச் சேவையைப் பயன்படுத்த விரும்பும் அமெரிக்கப் பிரஜைகள் இணையத்தளம் ஊடாகப் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அதன் பின்னர் வெளியேறும் நேரம் மற்றும் ஒன்றுகூடும் இடங்கள் குறித்த விவரங்கள் வழங்கப்படும். தற்போது ஜெருசலேம் மற்றும் டெல் அவிவ் ஆகிய பகுதிகளிலிருந்து இந்த வெளியேற்றங்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.


அம்மானிலிருந்து விமானங்களை முன்பதிவு செய்வது உட்பட, தங்களின் அடுத்தகட்டப் பயண ஏற்பாடுகளுக்குப் பயணிகளே பொறுப்பு என்று அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.


சூழ்நிலை மாற்றமடைவதற்கு ஏற்ப, இஸ்ரேலில் இருந்து வெளியேற விரும்பும் அமெரிக்கப் பிரஜைகளுக்குத் தேவையான மேலதிக தகவல்களைத் தொடர்ந்து வழங்குவதாகத் தூதரகம் தெரிவித்துள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button