News

போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை.. டிரம்பை இனி வானத்தைப் பார்த்துக் கொண்டிருக்க சொல்லவும் .. – ஈரான்

ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டு ஆக்கிரமிப்பு தீவிரமடைந்துள்ள பின்னணியில், ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் எந்தவிதமான பேச்சுவார்த்தைகளும் நடைபெறுவதாக வெளியாகும் செய்திகளை ஈரான் அதிகாரிகள் கடுமையாக மறுத்துள்ளனர்.

ஈரானின் கடுமையான பதில் தாக்குதல்களுக்கு மத்தியில், ஈரானின் முக்கிய உட்கட்டமைப்புகளை இலக்கு வைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விடுத்த எச்சரிக்கையிலிருந்து அவர் தற்போது பின்வாங்கியுள்ளதாக ஈரான் பாதுகாப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். ஈரானின் நம்பகமான இராணுவ வலிமைக்கு முன்னால் டிரம்ப் பின்வாங்க தீர்மானித்துள்ளதாக சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தஸ்னிம் (Tasnim) செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக நிதிச் சந்தைகளில் ஏற்பட்டுள்ள கடும் அழுத்தம் மற்றும் மேற்கத்திய நாடுகளின் பிணைப்பத்திரச் சந்தைக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் ஜனாதிபதி டிரம்ப்பின் இந்த பின்வாங்கலுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

போர் தொடங்கியதிலிருந்து பல்வேறு மத்தியஸ்தர்கள் ஊடாக தங்களுக்கு செய்திகள் கிடைத்துள்ள போதிலும், தேவையான இராணுவ ஸ்திரத்தன்மை ஏற்படும் வரை ஈரான் தொடர்ந்து தனது தற்காப்புக்காகப் போராடும் என்றும் அந்த அதிகாரி வலியுறுத்தினார்.

“எந்த பேச்சுவார்த்தைகளும் நடைபெறவில்லை. தற்போதைய உளவியல் போர் சூழலில், ஹோார்முஸ் நீரிணை போருக்கு முந்தைய நிலைக்குத் திரும்பாது. அதேபோல் எரிசக்தி சந்தையிலும் ஸ்திரத்தன்மையை எதிர்பார்க்க முடியாது” என்று அவர் மேலும் கூறினார்.

முன்னதாக டொனால்ட் டிரம்ப் தனது ‘Truth Social’ கணக்கில் பதிவொன்றைச் செய்து, மத்திய கிழக்கு மோதல்களைத் தணிப்பதற்காக கடந்த இரண்டு நாட்களில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் மிகவும் வெற்றிகரமான மற்றும் பயனுள்ள பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாகத் தெரிவித்திருந்தார்.

அந்தப் பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றத்தைக் கருத்திற்கொண்டு, ஈரானின் எரிசக்தி மையங்கள் மீது திட்டமிடப்பட்டிருந்த தாக்குதல்கள் ஐந்து நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டதாகவும் டிரம்ப் கூறியிருந்தார். எனினும், இது ஈரான் மக்களுக்கு எதிராக அமெரிக்க நிர்வாகம் முன்னெடுக்கும் குற்றச் செயல்களின் மற்றுமொரு அங்கம் மாத்திரமே என ஈரான் பாதுகாப்புப் பிரிவினர் கூறுகின்றனர்.

கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி ஈரானிய இஸ்லாமிய புரட்சியின் தலைவர் அயதுல்லா சையித் அலி கமேனி உட்பட சிரேஷ்ட இராணுவத் தளபதிகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராக பாரிய இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தன. இதற்குப் பதிலடியாக ஈரானிய ஆயுதப் படைகள் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தளங்களைக் குறிவைத்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தின.

இதேவேளை, வரும் நாட்களில் அமெரிக்க-இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக ஈரான் புதிய “அதிர்ச்சிகளை” தயார் செய்துள்ளதாக ஈரான் தரப்பு தெரிவிக்கிறது. டிரம்ப்பின் இராணுவ விருப்பங்கள் தோல்வியடைந்துள்ளதாகவும், அவர் இப்போது சமூக ஊடகங்கள் மூலம் வார்த்தைகளால் போரிட முயற்சிப்பதாகவும் அவர்கள் கிண்டலாகக் கூறுகின்றனர்.

“டிரம்ப் இப்போது செய்ய வேண்டியது தனது கைபேசியைப் பார்ப்பதை நிறுத்திவிட்டு, வானத்தையும், பங்குச் சந்தையையும், எண்ணெய் விலையையும் உன்னிப்பாகக் கவனிப்பதுதான்” என்று ஈரானிய இராணுவப் பேச்சாளர் இறுதியாகக் குறிப்பிட்டார்.

Recent Articles

Back to top button