லண்டனில் யூத சமூகத்திற்குச் சொந்தமானஆம்புலன்ஸ்கள் தீவைப்பு :

லண்டனின் வடக்குப்பகுதியான கோல்டர்ஸ் கிரீன் பகுதியில் உள்ள யூத சமூகத்திற்குச் சொந்தமான ‘ஹட்சோலா’ (Hatzola) அவசர சிகிச்சை சேவைக்குச் சொந்தமான ஆம்புலன்ஸ் வாகனங்கள் திங்கட்கிழமை அதிகாலை தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவத்தில் இரண்டு ஆம்புலன்ஸ் வாகனங்கள் முற்றாக சேதமடைந்துள்ளன. இந்தத் தாக்குதலில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. எனினும், இது ஒரு திட்டமிடப்பட்ட வெறுப்புணர்வுத் தாக்குதல் (Hate crime) என்ற கோணத்தில் லண்டன் பெருநகர காவல்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், யூத சமூக நிறுவனங்களை இலக்கு வைத்து இத்தகைய தாக்குதல்கள் நடத்தப்படுவது லண்டன் வாழ் யூத மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன், மேலதிக விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்தத் தாக்குதலுக்கு ‘ஹரகாத் அஷாப் அல்-யமின் அல்-இஸ்லாமியா’ (Harakat Ashab al-Yamin al-Islamia) என்ற இஸ்லாமியக் குழு உரிமை கோரியுள்ளதாகக் கூறப்படுகிறது.
சம்பவம் நடந்த இடம் மற்றும் ஆம்புலன்ஸ் வண்டிகள் தீப்பற்றி எரியும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்றை அந்த அமைப்பு தனது டெலிகிராம் (Telegram) பக்கத்தில் வெளியிட்டுள்ளது.



