போர்நிறுத்தத்திற்கு மத்தியிலும் ஈரான் எம்மீது தாக்குதல் நடத்துகிறது – நெதன்யாகு

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான “பயனுள்ள அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு” இடமளிக்கும் வகையில் அமெரிக்கா திட்டமிட்டிருந்த தாக்குதல்களை ஐந்து நாட்களுக்கு ஒத்திவைத்துள்ள போதிலும், ஈரான் மற்றும் லெபனான் மீதான தாக்குதல்களை நிறுத்தப்போவதில்லை என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்கா போர்நிறுத்தம் குறித்து பரிசீலித்து வந்தாலும், இஸ்ரேல் தனது அத்தியாவசியத் தேவைகளைப் பாதுகாப்பதற்காகத் தொடர்ந்து தாக்குதல்களை முன்னெடுக்கும் என இஸ்ரேலிய பிரதமர் தெரிவித்தார்.
கடந்த 48 மணிநேரத்தில் ஈரான் சிவிலியன்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியுள்ளதாகச் சுட்டிக்காட்டிய நெதன்யாகு, இது ஈரான் முழு உலகிற்கும் அச்சுறுத்தல் என்பதற்குச் சான்றாகும் எனத் தெரிவித்தார். குறிப்பாக, சனிக்கிழமை இரவு இஸ்ரேலின் அணுசக்தி ஆராய்ச்சி மையத்திற்கு அருகிலுள்ள இரண்டு குடியிருப்புகள் மீது ஈரானிய ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதில் சுமார் 200 பேர் காயமடைந்ததாக மූலாதாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், திங்கட்கிழமை அன்று ஐக்கிய அரபு அமீரகம் 7 ஈரானிய ஏவுகணைகளையும் 16 ட்ரோன்களையும் இடைமறித்துள்ளதுடன், ஈரானின் தாக்குதல் திறன் இன்னும் தீவிரமாக இருப்பதை இது உறுதிப்படுத்துகிறது.
இதேவேளை, தாம் நேரடிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதாக ட்ரம்ப் முன்வைக்கும் கூற்றுக்களை ஈரான் நிராகரித்துள்ளது. அமெரிக்கா தனது தாக்குதல் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான கால அவகாசத்தைப் பெறவே இவ்வாறு கூறுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்காவிட்டால் ஈரானின் எரிசக்தி மையங்களை அழிப்பதாக ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கையிலிருந்து அவர் பின்வாங்கியது, ஈரானின் பதில் தாக்குதல்களுக்கு பயந்தே என ஈரானிய அரச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
ஈரான் இஸ்ரேல் மீது பாரிய ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலால் டெல் அவிவ் உள்ளிட்ட பல பகுதிகளில் விமானத் தாக்குதல் எச்சரிக்கை ஒலிகள் எழுப்பப்பட்டதுடன், பாதுகாப்பு அமைப்புகள் ஏவுகணைகளை அழிக்கும்போது ஏற்பட்ட வெடிப்புச் சத்தங்கள் நகரம் முழுவதும் எதிரொலித்தன. வடக்கு இஸ்ரேலில் சில வீடுகளுக்கு சேதம் ஏற்பட்ட போதிலும், உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை.
கடந்த திங்கட்கிழமை தனது ‘Truth Social’ கணக்கில் பதிவிட்டிருந்த ஜனாதிபதி ட்ரம்ப், மத்திய கிழக்கில் மோதல்களை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக ஈரானுடன் மிகவும் பயனுள்ள பேச்சுவார்த்தைகளை நடத்தியதாகக் குறிப்பிட்டிருந்தார். அதன் விளைவாகவே ஈரானின் எரிசக்தி அமைப்பு மீதான தாக்குதல் 5 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இருப்பினும், ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாப் இந்தக் கூற்றை வன்மையாக மறுத்துள்ளார். அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்றும், நிதி மற்றும் எண்ணெய் சந்தையைக் கையாளுவதற்கு அமெரிக்கா “போலிச் செய்திகளை” (Fake news) பயன்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இதற்கிடையில், அமெரிக்க இலக்குகள் மீது புதிய தாக்குதல்களை நடத்தவுள்ளதாக ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) அறிவித்துள்ளது. ட்ரம்ப்பின் கூற்றுக்கள் ஈரானின் போர் நடவடிக்கைகளில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாத “காலாவதியான உளவியல் போர்முறை” என அவர்கள் வர்ணித்துள்ளனர்.
ஈரான் மற்றும் வாஷிங்டனின் முரண்பட்ட கருத்துக்களால் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி உலகளாவிய சந்தையில் மீண்டும் நிலையற்ற தன்மை ஏற்பட்டது. ஹார்முஸ் ஜலசந்தியை முடக்குவதாக ஈரான் விடுத்த எச்சரிக்கையால் எரிசக்தி விநியோகம் குறித்த அச்சம் மீண்டும் எழுந்துள்ளது. அதன்படி, ‘Brent’ வகை கச்சா எண்ணெய் விலை 4.2% அதிகரித்து ஒரு பேரல் 104.21 டாலராகவும், அமெரிக்க கச்சா எண்ணெய் விலை 4.3% அதிகரித்து ஒரு பேரல் 91.93 டாலராகவும் பதிவானது.



