News

இலங்கையின் முதலாவது முஸ்லிம் ‘இன்டர்வென்ஷனல் ரேடியாலஜிஸ்ட்’ (Interventional Radiology) – மருதமுனையில் இருந்து..

புதியதோர் வரலாறு: இலங்கையின் முதலாவது முஸ்லிம் ‘இன்டர்வென்ஷனல் ரேடியாலஜிஸ்ட்’ (Interventional Radiology)

இலங்கையின் மருத்துவத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியிருக்கும் எமது நண்பர் டாக்டர் ரிஸ்வி ஹமீட்  அவர்களை நாம் பெருமையுடன் வாழ்த்துகிறோம். கதிரியக்கவியலில் தனது முதுகலை பட்டத்தை (MD-Radiology) முடித்த அவர், தற்போது தனது கனவுத் துறையான ‘இன்டர்வென்ஷனல் ரேடியாலஜி’ (Interventional Radiology – IR) எனும் உயர் சிறப்புத் துறையில் கால்பதித்துள்ளார்.
இதன் மூலம், இந்தத் துறையில் நிபுணத்துவம் பெறும் இலங்கையின் முதலாவது முஸ்லிம் மருத்துவர் என்ற பெருமையை அவர் எமது சமூகத்திற்கு பெற்றுத் தருகின்றார்


‘இன்டர்வென்ஷனல் ரேடியாலஜி’ (Interventional Radiology) என்றால் என்ன?
இதனை மிக எளிமையாக “காயமே இல்லாத அறுவை சிகிச்சை” என்று கூறலாம். பெரிய தழும்புகள் அல்லது அறுவை சிகிச்சை கத்திகள் இன்றி, நவீன ஸ்கேன் (X-ray, CT, Ultrasound) கருவிகளின் உதவியுடன், உடலின் உட்பகுதியை திரையில் பார்த்தவாறே மிகச்சிறிய ஊசி துளை மூலம் சிகிச்சைகளை மேற்கொள்வதே இத்துறையின் சிறப்பம்சமாகும்.

இந்த சிகிச்சையினால் மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள்:
பெரிய தழும்புகள் இல்லை: அறுவை சிகிச்சையைப் போல பெரிய தழும்புகள் ஏற்படாது, ஒரு சிறிய ஊசி துளை மட்டுமே இருக்கும்.
விரைவான குணமடைதல்: நோயாளிகள் மிக விரைவாக வீடு திரும்ப முடியும் (பெரும்பாலும் 24 மணிநேரத்திற்குள்).
குறைவான வலி: அதிகப்படியான மயக்க மருந்தோ அல்லது பெரிய வெட்டுக்காயங்களோ இல்லாததால் வலி மிகக் குறைவாகவே இருக்கும்.
அதிக துல்லியம்: இரத்த நாளங்களுக்குள் துல்லியமாகச் சென்று நோயைக் குணப்படுத்த முடியும்.

இன்டர்வென்ஷனல் ரேடியாலஜி (Interventional Radiology)  மூலம் மேற்கொள்ளப்படும் முக்கிய சிகிச்சைகள்:

1.⁠ ⁠ஆஞ்சியோபிளாஸ்டி (Angioplasty) :
அடைக்கப்பட்ட இரத்த நாளங்களைச் சீர்செய்து இரத்த ஓட்டத்தை மீண்டும் ஏற்படுத்துதல்.
2.⁠ ⁠அனியூரிசம் / ஏ.வி.எம் (Aneurysm / AVM) :
இரத்த நாளங்களில் ஏற்படும் ஆபத்தான வீக்கங்கள் அல்லது சிதைவுகளை சரிசெய்தல்.
3.⁠ ⁠புற்றுநோய் சிகிச்சை (Cancer Treatment) :
ஈரல் (Liver) மற்றும் சிறுநீரகத்தில் (Kidney) உள்ள புற்றுநோய் கட்டிகளுக்கு சிறிய துளை மூலம் மருந்துகளைச் செலுத்தி அழித்தல்.
4.⁠ ⁠பயாப்ஸி (Biopsy) :
உடலின் உட்பகுதியிலுள்ள திசுக்களை ஸ்கேன் உதவியுடன் மிகத் துல்லியமாக மாதிரி எடுத்தல்.
5.⁠ ⁠அவசர இரத்தப்போக்கு தடுப்பு (Emergency Bleeding Arrest)
விபத்து அல்லது உட்புறக் காயங்களால் ஏற்படும் உயிர் ஆபத்தான இரத்தப்போக்கை உடனடியாகக் கட்டுப்படுத்துதல்.
6.⁠ ⁠தசை மற்றும் மூட்டு சிகிச்சை (MSK – Musculoskeletal) :
மூட்டுவலி மற்றும் தசை சார்ந்த நீண்டகால வலிகளுக்கு ஊசி மூலம் துல்லியமான தீர்வளித்தல்.


இன்டர்வென்ஷனல் ரேடியாலஜிஸ்ட் ஆக உருவாகும் மருதமுனையின் வாரிசான டாக்டர் ரிஸ்வி ஹமீத், புதிய தலைமுறை மருத்துவர்களுக்கு ஒரு உந்துசக்தியாக விளங்குகிறார். நவீன மருத்துவ தொழில்நுட்பம் நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் சென்றடைய வேண்டும், மக்கள் இலகுவான முறையில் உயர்தர சிகிச்சைகளைப் பெறவேண்டும் என்ற  இவரது கனவு நனவாகி, விரைவில்  எமது மண்ணில் வைத்தியநிபுணராகத் தடம் பதிக்க
நண்பர்கள் சார்பாகவும், எமது சமூகம் சார்பாகவும் பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்!

மருத்துவ உலகின் நவீன பரிணாமம் – இப்போது நம் இலங்கையில்!

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button