“நிலக்கரி மூலம் தேவையான மின்சாரம் கிடைக்கவில்லை.. மின்வெட்டைத் தவிர்க்க முயற்சிக்கிறோம்.. – டில்வின்”

குறைந்த தரத்திலான நிலக்கரி பயன்பாட்டினால் மின் உற்பத்தி நிலையங்களில் எதிர்பார்த்த அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாமல் போயுள்ளதாகவும், அந்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய அதிகளவு டீசலை எரிப்பதன் காரணமாக மின்சாரக் கட்டணம் அதிகரித்துள்ளதாகவும் ஜொதா விமுக்தி பெரமுனவின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நடைபெற்ற 53வது ஏப்ரல் வி்ரு (வீரர்) நினைவு தின நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலதிகமாக கருத்து தெரிவித்த டில்வின் சில்வா, எதிர்க்கட்சிகள் கூறுவது போல் இதில் எந்தவொரு திருட்டோ அல்லது மோசடியோ இடம்பெறவில்லை எனச் சுட்டிக்காட்டினார். டெண்டர் நடைமுறை மூலம் நிலக்கரி வழங்கிய நிறுவனம் ஒன்று, தரம் குறைந்த நிலக்கரியை வழங்கியமையாலேயே இந்தப் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும், இது குறித்து விசாரணைகளை நடத்தி சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
நாட்டின் எரிபொருள் நெருக்கடி மற்றும் உலக அரசியல் சூழ்நிலைகளுக்கு மத்தியில், எதிர்க்கட்சிகள் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் பொய்ப் பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.
மின்வெட்டு இன்றி மின்சார விநியோகத்தைப் பேணுவதே அரசாங்கத்தின் அதிகபட்ச முயற்சியாகும் எனவும், அதற்கு மக்களின் ஒத்துழைப்பு அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.
பகல் வேளையில் போதியளவு மின்சாரம் உள்ள போதிலும், இரவு வேளையில் நிலவும் அதிக கேள்வியை (Demand) மேலாண்மை செய்வதற்காக, இரவு நேரங்களில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு அவர் மக்களிடம் கேட்டுக்கொண்டார். இரவு நேரங்களில் மேலதிக மின்சாரத்தை டீசல் மூலம் உற்பத்தி செய்ய வேண்டியுள்ளதே மின்சாரக் கட்டணம் உயருவதற்குப் பிரதான காரணம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.



