14 வயதில் உயர்தரப் பரீட்சையில் (3 A ) சித்தியடைந்த திஸ்ஸமஹாராமயவைச் சேர்ந்த இளம் பிக்கு

பாலி, சமஸ்கிருதம் மற்றும் பௌத்த தர்மம் ஆகிய மூன்று பாடங்களிலும் 3 ‘A’ சித்திகள்
முயற்சியும் அர்ப்பணிப்பும் இருந்தால் எதனையும் சாதிக்க முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில், திஸ்ஸமஹாராமயவைச் சேர்ந்த 14 வயதுடைய இளம் பிக்கு ஒருவர் இம்முறை உயர்தரப் பரீட்சையில் மூன்று பாடங்களிலும் ‘A’ சித்திகளைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளார்.
காவ்யசூரி, பிரா சீன பண்டித பூஜ்ய திஸ்ஸமஹாராமய சுமன தர்ம தேரர் என்ற இந்த இளம் பிக்கு, கொழும்பு கிருலப்பனை ஸ்ரீ கிருலாஷ்ரம விகாரையில் தங்கியிருந்து கல்வி கற்று வருகிறார்.
தனது சாதனை குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர்:
“நான் கலைப் பிரிவில் பாலி, சமஸ்கிருதம் மற்றும் பௌத்த தர்மம் ஆகிய பாடங்களைத் தெரிவு செய்தேன். இந்தப் பரீட்சைக்குத் தயாராக எனக்குக் கிடைத்த காலம் வெறும் மூன்று மாதங்கள் மட்டுமே. நம்மால் முடியும் என்று நினைத்தால் இவ்வுலகில் சாதிக்க முடியாதது எதுவுமில்லை. முயற்சி மட்டுமே ஒருவருக்குத் தேவை.
நான் 12 வயதிலேயே சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றி 10 பாடங்களிலும் சித்தியடைந்தேன். பின்னர் பிரா சீன ஆரம்ப மற்றும் மத்திய பரீட்சைகளிலும் சித்தியடைந்து, 13 வயதில் பண்டித பரீட்சையை முடித்தேன். அதன் பின்னரே 14 வயதில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றினேன். முயற்சி இருந்தால் எதையும் செய்யலாம் என்பதை எனது அக்காமார்களுக்கும் அண்ணன்மார்களுக்கும் (மாணவர்களுக்கு) கூற விரும்புகிறேன்,” என்றார்.
தனது மூன்றரை வயதிலேயே பௌத்த துறவறத்தில் ஆர்வம் காட்டிய இவர், 4 வயதில் துறவறம் பூண்டார். மிகக் குறைந்த வயதில் இத்தகைய கல்விச் சாதனைகளை நிகழ்த்தியிருப்பது பலருக்கும் முன்மாதிரியாக அமைந்துள்ளது.



