பெட்ரோல் விலையை 80 ரூபாவால் குறைத்த பாகிஸ்தான் அரசு ..

ஈராக் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் போர் பதற்றத்தால் உலக சந்தையில் எண்ணெய் விலைகள் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தான் அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு 80 ரூபாயால் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த விலை திருத்தத்துடன், பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோலின் புதிய விலை 378 ரூபாயாக குறையும்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், அரசாங்கத்தினால் விதிக்கப்படும் எரிபொருள் வரிகளைக் குறைப்பதன் மூலம் மக்களுக்கு இந்த நிவாரணம் வழங்கப்படும் எனத் தெரிவித்தார். இந்த புதிய விலைக்குறைப்பு குறைந்தது அடுத்த ஒரு மாத காலத்திற்கு அமலில் இருக்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
கடந்த சில நாட்களில் பாகிஸ்தான் அரசு எரிபொருள் விலையை 42.7% உயர்த்த எடுத்த முடிவைத் தொடர்ந்து, அங்கு பெட்ரோல் விலை 485 ரூபாயாக உயர்ந்தது. இதற்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசைகள் உருவானதால் ஏற்பட்ட மக்கள் அழுத்தத்தைத் தணிப்பதற்காக அரசாங்கம் இந்த விலைக்குறைப்பு முடிவை எடுத்துள்ளது.
எவ்வாறாயினும், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பதுடன், அது 520 ரூபாய் என்ற மட்டத்திலேயே நீடிக்கிறது.
மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, இஸ்லாமாபாத் தலைநகரில் அரசாங்கத்திற்குச் சொந்தமான பொதுப் போக்குவரத்துச் சேவைகளை அடுத்த 30 நாட்களுக்கு மக்களுக்கு இலவசமாக வழங்க உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி தீர்மானித்துள்ளார்.
பஞ்சாப் மாகாண அரசு பொதுப் போக்குவரத்து கட்டணங்களை நீக்கியுள்ளதுடன், பேருந்துகள் மற்றும் லாரிகளுக்கு இலக்கு வைக்கப்பட்ட மானியங்களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. சிந்து மற்றும் கராச்சி அதிகாரிகள் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் சிறு விவசாயிகளுக்காக சிறப்பு மானியங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
எரிபொருளைச் சேமிப்பதற்காக, அரசு அலுவலகங்களுக்கு நான்கு நாள் வேலை வாரத்தை அறிமுகப்படுத்தவும், பாடசாலை விடுமுறைகளை நீடிக்கவும், சில வகுப்புகளை இணையவழியில் (Online) நடத்தவும் அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
மத்திய கிழக்கு நெருக்கடி காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி ஊடாக இடம்பெறும் எரிசக்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதால், பல ஆசிய நாடுகள் எரிசக்தி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன. பாகிஸ்தான் போன்ற பலவீனமான பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகள், அதிகரித்து வரும் எரிசக்தி விலைகள் மற்றும் விநியோகச் சங்கிலி முறிவுகள் காரணமாக கடுமையான ஆபத்தில் இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது.



