“தரமற்ற நிலக்கரி மோசடியானது தரமற்ற மருந்து மோசடியை விட இருபது மடங்கு பெரியது.. குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு..”

தரமற்ற நிலக்கரி மோசடியானது தரமற்ற மருந்து மோசடியை விட 20 மடங்கு பெரியது: குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு
லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்குத் தரமற்ற நிலக்கரியைக் கொள்வனவு செய்வது திட்டமிட்ட சதி என கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை உறுதிப்படுத்துவதால், இது குறித்து உடனடியாக குற்றவியல் விசாரணையை ஆரம்பிக்குமாறு கோரி வைத்திய மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்திய சங்கங்களின் கூட்டமைப்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் (CID) எழுத்துப்பூர்வமான முறைப்பாடொன்றை சமர்ப்பித்துள்ளது.
அந்தக் கூட்டமைப்பின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
“முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் காலத்தில் இடம்பெற்ற தரமற்ற மருந்து மோசடியால் சுமார் 1,000 இலட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்ட போதிலும், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இடம்பெற்றுள்ள இந்தத் தரமற்ற நிலக்கரி மோசடியானது 20,000 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமானது.”
பதிவு செய்யப்படாத நிறுவனமொன்றுக்கு கொள்வனவு டெண்டரை வழங்கியது முதல் இது ஒரு முறையான சதியாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் அரசாங்கத்திற்கும், மின்சாரக் கட்டண அதிகரிப்பு ஊடாக பொதுமக்களுக்கும் பாரிய பொருளாதார நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், இந்தத் தரமற்ற நிலக்கரியில் காணப்படும் அதிகப்படியான பாதரச (Mercury) அளவு காரணமாக மனிதர்களுக்கும், மீன் வளத்திற்கும் மற்றும் சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் பாதிப்புகளை மதிப்பிட முடியாத நிலையில் உள்ளதாகவும் வைத்தியர் வலியுறுத்தினார்.
இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் இது குறித்து முறைப்பாடுகள் செய்யப்பட்ட போதிலும் இதுவரை முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படாமை வருத்தமளிப்பதாகத் தெரிவித்த அவர், இது தொடர்பில் உடனடியாக குற்றவியல் விசாரணையை நடத்துமாறு கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில் பல சுயாதீன தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகள் எதிர்ப்புப் பாதாதைகளை ஏந்தியவாறு கலந்துகொண்டனர்.



