புனரமைக்கப்பட்ட கொழும்பு மத்திய பேருந்து நிலையம் நன்றாக உள்ளது – ஆனால் வெற்றிலை துப்புவதற்கு இடம் இல்லை என்பது பெரிய குறைபாடு ; பொதுஜன பெரமுன குற்றச்சாட்டு

கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தின் அண்மைய புனரமைப்பின் போது வெற்றிலை துப்புவதற்கு என ஒதுக்கப்பட்ட இடங்கள் இல்லாமை குறித்து சுட்டிக்காட்டிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) உறுப்பினர் நிஷாந்த டயஸ், பொது வசதிகள் நாட்டின் கலாசார நடைமுறைகளை பிரதிபலிப்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
பேருந்து நிலையம் அண்மையில் புனரமைக்கப்பட்டு வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்ட போதிலும், வெற்றிலை மெல்லுபவர்களுக்கான ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை என டயஸ் தெரிவித்தார்.
“பேருந்து நிலையம் வர்ணம் பூசப்பட்டு மிக விமர்சையாக திறந்து வைக்கப்பட்டது. ஆனால், மாலை வேளையில் அங்கு குவியும் அனைத்து மக்களுக்கும் தேவையான போக்குவரத்து வசதிகள் வழங்கப்பட்டுள்ளதா?” என அவர் கேள்வி எழுப்பினார்.
வெற்றிலை மென்று துப்புவது இலங்கையில் நீண்டகால கலாசார நடைமுறையாக இருந்து வருவதைக் குறிப்பிட்ட அவர், வசதிகளைத் திட்டமிடும்போது இப்பிரச்சினை ஏன் கவனத்தில் கொள்ளப்படவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும், முறையான வசதிகள் இல்லாமை குறித்துப் பேசுவதை விடுத்து, பேருந்து நிலையத்தில் வெற்றிலைக் கறைகள் இருப்பது குறித்தே பொது விவாதங்கள் அதிக கவனம் செலுத்துவதாக டயஸ் கூறினார்.
“இந்த நாட்டில் ஒரு கலாசாரம் உள்ளது. வெற்றிலை மென்றுவிட்டு தரையிலோ அல்லது ஒரு மூலையிலோ துப்புவது நீண்ட காலமாக நமது கலாசாரத்தின் ஒரு அங்கமாக இருந்து வருகிறது. மக்கள் காலத்திற்கேற்ப மாற வேண்டும் என்பது உண்மைதான், ஆனால் அது திடீரென நடந்துவிட முடியாது,” என்று அவர் கூறினார்.
குறிப்பாக கிராமப்புறங்களில் இருந்து நகர்ப்புறங்களுக்குப் பயணம் செய்யும் மக்களுக்காகப் போதிய வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.



