News

மூன்று அம்சங்களில் அடைவுகளை எட்ட முடியாமல் போய் பின்னடைவை சந்தித்த அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தை பற்றி ஒரு பார்வை..

✍️ தில்ஷான் முகம்மத்                   இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தைகள் எதிர்பார்த்த இலக்குகளை அடையாமல் பின்னடைவை சந்தித்திருக்கிறது.

எங்களுடைய   “விதிமுறைகளுக்கு (Terms)” ஈரான் உடன்பட மறுத்திருப்பதால் பேச்சுவார்த்தை வெற்றியளிக்கவில்லை என  உப ஜனாதிபதி DJ Vance தெரிவித்திருக்கிறார்.

ஒரு யுத்தத்தின் பின்னரான பேச்சுவார்த்தையில் , யுத்தத்தின் பிரதிபலிப்புக்கள் ( leverages) இருதரப்பின் கோரிக்கைகளை தீர்மானிக்கும் சக்தியாக மாறும்.

47 வருடங்கள் நேரடியாக பேசி தீர்ப்பது சாத்தியமே இல்லை என்ற நிலையில் இருந்து கீழ் இறங்கி இரு தரப்பும் சந்தித்து பேசி தீர்மானிக்க இணங்கியதன் பிண்ணனியே யுத்தத்தின் அடைவுகள்தான் (அழிவுகள்/ வெற்றிகள்). இந்த சமபலமே இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தைக்கான அடிப்படை.

இந்த புள்ளியில் இருந்து இருதரப்பிலும் அறவே விட்டுக்கொடுக்க முடியாத சில கோரிக்கைகள் ( Maximalist demands) இருக்கவே செய்யும். இந்த விட்டுக்கொடுக்க முடியாத புள்ளியில் இருந்து இருதரப்பையும் ஓர் உடன்படும் புள்ளிக்கு இழுத்துவிடுவதுதான் பேச்சுவார்த்தையின் வெற்றியாக கருதப்படும்.

மூன்று அம்சங்களில் அடைவுகளை எட்ட முடியாமல் போயிருக்கிறது. DJ Vance இன்  மொழியில் சொல்வதானால், மூன்று இடங்களில் அமெரிக்காவின் “விதிமுறைகளுக்கு” ஈரான் இணங்க மறுத்திருக்கிறது

1. அணு சக்தி மற்றும் யுரேனியம் செறிவூட்டல் நடவடிக்கைகளை உடன் நிறுத்துதல். 47 வருட ஈரான் அமெரிக்கா இடையிலான சிக்கலின் மையப்புள்ளி ஒரே இரவில் முடிவுக்கு வருவது இலகுவானதல்ல.

2. தற்போது தொடரும் லெபனானில் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களுக்கும் ஓர் போர் நிறுத்தம் அவசியம் என்பது ஈரானின் நிலைப்பாடு. இதற்கு அமெரிக்கா இலகுவாக இணங்கியிருக்க முடியும். அவ்வாறான இணக்கப்பாடு  இஸ்ரேலின் தோல்வியாகவே கருதப்படும். 

எதிர்வரும் திங்கட்கிழமை இஸ்ரேலுக்கும் லெபனான் அரசாங்கத்திற்கும் ஒரு பேச்சுவார்த்தையை அமெரிக்கா வொஷிங்டன் நகரில் ஏற்பாடு செய்திருக்கிறது. அந்த பேச்சுவார்த்தை ஹிஸ்புல்லாஹ்வின் ஆயுதங்களை களைவதை (Disarmament) அடிப்படையாக கொண்டது. குறித்த பேச்சுவார்த்தையில் ஒரு “முன்னேற்றத்தை” ஏற்படுத்தி, லெபனான் விடயத்தில் இஸ்ரேலுக்கு ஒரு “வெற்றியை” பரிசளிக்கவும் ஈரானை புறம்தள்ளவும் அமெரிக்கா விரும்புகிறது.

அமெரிக்காவுக்கு முதலிடம் (America First) என அமெரிக்கா நினைக்காமல் இஸ்ரேலுக்கு முதலிடம் (Israel First) என அமெரிக்கா நடந்துகொள்வதே சிக்கலை தோற்றுவித்திருக்கிறது என ஈரானிய உப ஜனாதிபதி மொஹமட் ரீஸா குறிப்பிட்டதன் பிண்ணனி இதுவே.

3. ஹோர்மூஸ் நீரிணையின் கட்டுப்பாடு.

47 வருடங்களாக ஈரான் ஹோர்மூஸை மூடவும் இல்லை, அதை எந்தவொரு பேச்சுவார்த்தை மேசையிலும் ஒரு கருவியாக பயன்படுத்தவும் இல்லை. இந்த யுத்தத்தின் பின்னர் ஹோர்மூஸ் நீரிணை ஈரானின் ஒரு முக்கிய பேரம் பேசும் கருவியாக (Bargaining Chip) மாற்றம் பெற்றிருக்கிறது.

தொடர்ந்தும் நீரிணையை மூடிவைக்க முடியாது என்பதை ஈரான் நன்கு அறியும். எனினும் தனக்கு கிடைக்கவேண்டிய பொருளாதார நலன்களை (பொருளாதார தடைகளை அகற்றுதல்/ ஈரானிய சொத்துக்களை விடுவித்தல்)  பெற்றுக்கொண்டு மீண்டும் பழைய நிலைக்கு நீரிணையை திறந்துவிடும் Maximalist நிலைப்பாட்டை ஈரான் கொண்டிருக்கிறது. இந்த யுத்தத்தின் பின்னர் ஈரான் பெற்றிருக்கும் மூலோபாய வெற்றிகளில் (Strategic advantages) இதுவும் ஒன்றாகும்.

இஸ்ரேலையும் இஸ்ரேலுடன் இணைந்து செயற்படும் ஒரு வளைகுடா நாட்டையும் தவிர, அமெரிக்கா/ ஈரான்/ பிராந்திய நாடுகள் எதுவும் மீண்டும் ஒரு யுத்ததை விரும்பவில்லை.

Round 2, 3 என ஆமை வேகத்திலேனும் சமரச பேச்சுவார்த்தைகள் தொடரப்போகின்றவா அல்லது இஸ்ரேல் குழப்பிவிடும் குட்டைக்குள் அகப்பட்டு மீண்டும் ஒரு யுத்தம் ஆரம்பிக்கப்பட போகிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button