“டீசல் கொள்வனவு விலை 286 டொலரைத் தாண்டியது – கனிம எண்ணெய் கூட்டுத்தாபனத் தலைவர் தெரிவிப்பு”

கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்று 286 டொலர் கொடுத்து கொள்வனவு செய்யப்படவில்லை என இலங்கை கனிம எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.
இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்று இவ்வளவு அதிக விலைக்கு வாங்கப்படவில்லை என்றும், மத்திய கிழக்கு போர் சூழல் ஆரம்பித்த பின்னர் கடந்த மார்ச் மாதம் 11ஆம் திகதி நாட்டிற்கு வந்த கச்சா எண்ணெய் கப்பலில் ஒரு பீப்பாயின் விலை 66.99 டொலர் மட்டுமே என்றும் அவர் விளக்கமளித்தார்.
அத்துடன், இன்றைய தினம் (17) நாட்டிற்கு வரவிருக்கும் கச்சா எண்ணெய் கப்பலில் ஒரு பீப்பாயின் விலை 71.99 டொலர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கச்சா எண்ணெய் இவ்வளவு அதிக விலைக்கு வாங்கப்படவில்லை என்று கூறிய தலைவர், டீசலை கொள்வனவு செய்யும் போது மட்டும் 286 டொலருக்கும் அதிகமான விலைக்கு வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகத் தெரிவித்தார்.
மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக டீசல் விலை பாரியளவில் அதிகரித்துள்ளதாகவும், இதன் காரணமாக டீசலை கொள்வனவு செய்யும்போது 288 டொலர் முதல் 303 டொலர் வரையான விலையை செலுத்த வேண்டியிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தலைவர் டி.ஜே. ராஜகருணாவின் மேலதிக கருத்துக்கள்:
“நாங்கள் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் 286 டொலருக்கு வாங்கவில்லை. இந்த நெருக்கடி தொடங்கிய பிறகு மார்ச் 11 அன்று வந்த ‘மர்பன்’ கச்சா எண்ணெய் பீப்பாய் 66.99 டொலராக இருந்தது. இன்று வரும் கப்பலில் விலை 71.99 டொலர். எனவே கச்சா எண்ணெய் இந்த விலைக்கு வாங்கப்படவில்லை என்பது தெளிவாகிறது.
எச்.எஸ்.பி.சி (HSBC) வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி செய்த ஒரு அறிவிப்பை ஊடகங்கள் தவறாகப் புரிந்துகொண்டு செய்தியாக வெளியிட்டுள்ளன அல்லது திட்டமிட்டுப் பரப்பியுள்ளன. எச்.எஸ்.பி.சி நிறுவனம் வெளியிட்ட ஊடக அறிக்கையில் அவர்கள் ‘கச்சா எண்ணெய்’ (Crude Oil) என்று குறிப்பிடவில்லை, ‘எரிபொருள் கொள்வனவு’ (Fuel purchase) என்றே குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறான செய்திகள் நாட்டில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துகின்றன.
உலக சந்தையில் டீசல் விலை பெருமளவில் அதிகரித்துள்ளது. அதன் சராசரி விலையுடன் பிரீமியம் (Premium) தொகையாக 48 முதல் 50 டொலர் வரை சேர்க்கப்பட்டதால் விலை அதிகரித்தது. அவ்வாறு அதிக விலை கொடுத்தாவது எண்ணெயை வாங்காவிட்டால் நாட்டின் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்படும்.
மார்ச் 31 அன்று வந்த டீசல் கப்பலுக்கு 285.28 டொலரும், ஏப்ரல் 7 அன்று வந்த கப்பலுக்கு 288.06 டொலரும் செலுத்தப்பட்டது. சூப்பர் டீசல் ஒரு பீப்பாய் 303.77 டொலராக இருந்தது.”



