News

எரிபொருள் கொள்வனவில் 17.7 பில்லியன் ரூபா வரை பாரிய நிதி மோசடி.. – லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு…

கடந்த காலப்பகுதியில் நாட்டிற்கு எரிபொருள் இறக்குமதி செய்யப்பட்டபோது 17.715 பில்லியன் ரூபாய் (56.27 மில்லியன் அமெரிக்க டொலர்) அளவிலான பாரிய நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாகக் கூறி, லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் விசேட முறைப்பாடொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சன்க சந்தீம அபேவர்தன என்பவரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த முறைப்பாட்டில், தற்போதைய அரசாங்கத்தின் உயர் மட்ட அதிகாரிகள் சிலருக்கு எதிராக நேரடியாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

உலகச் சந்தையில் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படலாம் என்ற முன்னெச்சரிக்கைகள் இருந்தபோதிலும், அதற்கான மூலோபாயக் கையிருப்புகளைச் சேகரிக்க அரசாங்கம் தவறியமையே இந்த நெருக்கடிக்குக் காரணம் என முறைப்பாட்டாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2022 ஆம் ஆண்டில் செயற்கையான எரிபொருள் தட்டுப்பாட்டை உருவாக்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்ட ஒரு அதிகாரியை இலங்கை கனிப்பொருள் எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் தலைவராக நியமித்ததே இந்த ஊழலின் ஆரம்பம் என அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்ட கடிதத்தின் தமிழாக்கம்:

நீதிபதி டபிள்யூ.எம்.என்.பி. இத்தவெல,

தலைவர்,

லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு.

விடயம்: 17.715 பில்லியன் ரூபாய் அல்லது 56.27 மில்லியன் டொலர் பெறுமதியான பாரிய கொள்ளை தொடர்பில்.

கௌரவத் தலைவர் அவர்களே,

ஈரானுக்கு எதிராக இஸ்ரேலும் அமெரிக்காவும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் பாரிய போர்த் தயார் நிலையில் இருந்ததையும், அதற்காகப் போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களை ஈரானுக்கு அருகில் நிலைநிறுத்தியிருந்ததையும் உலகம் அறியும். இவ்வாறான தாக்குதல்களின் போது உலக எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படும் என்பதும், போருக்கு முன்னர் குறைந்த விலைக்கு வாங்கப்பட்ட எண்ணெய் கையிருப்புகள் உலகெங்கிலும் உள்ள புதிய வாங்குபவர்களுக்கு விற்கப்படும் என்பதும் பொதுவான விடயமாகும்.

இவ்வாறான நிலையில் குறைந்த விலைக்கு வாங்கப்பட்ட எரிபொருளை அதிக விலைக்கு விற்று பெரும் இலாபம் ஈட்டுவதும் வழமையாக நடைபெறுகிறது. பொதுவாக அரசாங்கங்கள் இவ்வாறான நிலைமைகளை எதிர்கொள்ள நீண்டகால டெண்டர்களை (Tenders) வழங்குவதுடன், பாரிய கையிருப்புகளையும் சேமித்து வைக்கும். இலங்கை அரசாங்கமும் வழக்கமாக இந்த இரண்டு உத்திகளையும் பின்பற்றுவதுண்டு.

ஆனால், ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க, அமைச்சர் குமார ஜெயக்கொடி மற்றும் இலங்கை கனிப்பொருள் எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆகியோர் கடந்த ஆண்டு முதல் இவற்றைச் செய்யத் தவறியமை, ஒரு பாரிய திருட்டிற்கு வழிவகுத்துள்ளதாக அவதானிக்கப்படுகிறது.

இலங்கை கனிப்பொருள் எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் தற்போதைய தலைவர், 2022 ஆம் ஆண்டில் செயற்கையான எரிபொருள் நெருக்கடியை உருவாக்கி நாட்டை சீர்குலைக்கக் காரணமாக இருந்தவர் என்பதும், அவர் அப்போது முத்துராஜவெல முனையத்தின் செயல்பாட்டு மேலாளராக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது குறித்து C105/22/CR என்ற குற்றப் புலனாய்வுத் திணைக்கள ஆவணத்தின் படி, 582 சந்தர்ப்பங்களில் தேவையான எரிபொருள் கையிருப்புகளை அவர் மறைத்துள்ளமை உறுதியாகியுள்ளது. இவ்வாறான ஒருவரை ஜனாதிபதியும் எரிசக்தி அமைச்சரும் தலைவராக நியமித்தமையே பாரிய ஊழலுக்கு வழிவகுத்துள்ளதாக நாங்கள் கருதுகிறோம்.

போர்ச் சூழல் நிலவிய போதிலும், இலங்கைக்கு இந்தியா மற்றும் சிங்கப்பூரிலிருந்தே எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. அதாவது எமது விநியோகத்திற்கு எவ்வித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை. மார்ச் மாதம் முழுவதும் கொண்டுவரப்பட்ட எண்ணெய்க்கான காப்புறுதி, போக்குவரத்து மற்றும் தரகர் இலாபம் உள்ளடங்கிய தவணைக்கட்டணம் (Premium) 3.54 டொலர் முதல் 4.43 டொலர் வரை குறைவாகவே இருந்தது. ஆனால், ஒரு செயற்கையான நெருக்கடியைக் காண்பித்து, அதிக தவணைக்கட்டணத்தைச் செலுத்தி இந்தியா மற்றும் சிங்கப்பூரிலிருந்து எண்ணெய் கொள்வனவு செய்ததன் மூலம் 17.715 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நிதி முறைகேடு நடந்துள்ளது தெளிவாகத் தெரிகிறது.

உரிய காலத்தில் மூலோபாயக் கையிருப்புகளைச் சேமித்து வைத்திருந்தால், பழைய விலையிலேயே 45-62 நாட்களுக்கு எரிபொருள் விநியோகத்தை வழங்கியிருக்க முடியும். அவ்வாறு செய்யாமல் இடைத்தரகர்களைப் போஷிப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட இந்த நிதி மோசடி குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.

தேசிய பாதுகாப்பு மற்றும் நாட்டின் எதிர்காலத்திற்குத் தீர்மானமிக்க புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களைக் கைவிட்டு, நிலக்கரி இறக்குமதியில் ஊழல் செய்து, பாரிய வெப்ப மின்சாரக் கொள்வனவை முன்னெடுப்பது தொடர்பாக ஏற்கனவே 5 முறைப்பாடுகளை உங்கள் ஆணைக்குழுவிடம் வழங்கியுள்ளோம். இந்த முறைப்பாடானது, அந்த மின்சார ஊழலால் ஏற்பட்ட நெருக்கடியைச் சாட்டாக வைத்து முன்னெடுக்கப்படும் 18 பில்லியன் ரூபாய் அளவிலான மற்றுமொரு கொள்ளை பற்றியதாகும். இது குறித்து உங்கள் அவசர கவனத்தைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.

சன்க சந்தீம அபேவர்தன

Recent Articles

Back to top button