முதலீடுகளும் முரண்பாடுகளும்..

தேசிய மக்கள் சக்தி (NPP) அமைச்ர்களால் சமர்ப்பிக்கப்ட்டுள்ள சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் பற்றிய பிரகடனத்தில் (Declaration of Assets and Liabilities) வழங்கப்பட்டுள்ள தகவல்கள் மக்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. தற்போதைய விவசாய அமைச்சர் லால்காந்த உட்பட முக்கிய அமைச்சர்கள், நுண்கடன் (Microfinance) வழங்கும் நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளமை குறித்து இன்றைய ஊடகங்களில் பலத்த விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
லால் காந்த, தேசிய மக்கள் சக்தியை சேர்ந்த, எதையும் தயக்கமின்றி வெளிப்படையாக பேசும் ஒரு யதார்த்தவாதியாக மக்களால் பெரிதும் விரும்பப்பட்டவர். அவர், 2021 ஆம் ஆண்டு ஹிங்குராக்கொடையில் 55 நாட்களாக நடைபெற்ற நுண்கடனால் பாதிக்கப்பட்ட வரிய மக்களால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு எதிராக நடத்தப்பட்ட சத்தியாக்கிரக போராட்டத்தில் நேரடியாக கலந்துகொண்டு அவர்களுக்கு ஆதரவை வழங்கியிருந்தார்; அவர்களது போராட்டத்துக்கான அடிப்படை வசதிகள் சிலவற்றையும் ஏற்பாடு செய்து தந்திருந்தார்.
ஆனால், அதற்கு அடுத்த வருடமே, (2022 ஆம் ஆண்டு) அவர் லங்கா கிரெடிட் அண்ட் பிஸ்னஸ் ஃபைனான்ஸ் (LCB Finance) நிறுவனத்தின் ரூபா 41,420.00 பெறுமதியான 5,450 பங்குகளை கொள்வனவு செய்துள்ளார் என சொல்லப்படுகிறது. இதற்காக அவர் முதலீடு செய்த மொத்தத் தொகை 22 கோடி ரூபாவுக்கும் அதிகமானதாகும். இதுவும் ஒரு நுண்கடன் வழங்கும் நிதி நிறுவனம் என்பதே முரண்பாடாக நோக்கப்படுகிறது.
இதற்கு முன்னர் சொத்து விபரங்கள் வெளியிடப்பட்டபோது, பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களும் அமைச்சர் வசந்த சமரசிங்கவும் இதேபோல “லங்கா ஒரிக்ஸ் லீஸிங் கம்பனி (LOLC) மற்றும் அசெட்லைன் (Assetline) போன்ற நிதி நிறுவனங்களில் பெருந்தொகையான பணத்தை நிலையான வைப்பில் (Fixed Deposits) முதலீடு செய்துள்ளமையும் தெரியவந்ததுள்ளது.
ஏழைகளை சுரண்டி இலாபம் பெறும் நுண்கடன் நிதி நிறுவனங்கள் மூலம், தமது செல்வத்தைப் பெருக்கிக் கொள்ள நினைப்பது ஒரு நாகரீகமான அரசியல் பண்பின் அடையாளமாக இருக்க முடியாது. நுண்கடன் போன்ற கொள்ளைக்கார நிதித் துறைகளில் இவர்கள் ஏன் முதலீடு செய்ய வேண்டும்? என்று பலராலும் கேள்விகள் எழுப்பப்படுள்ளன.
கடந்த ஆட்சிக்காலங்களில் இறக்குமதித் தீர்வை (வரி) களை கூட்டிக் குறைக்கும் அதிகாரத்தை முறைகேடாக பாவித்ததன் மூலம் ஒரு செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி வாகனங்கள், எண்ணெய், சீனி போன்ற இன்னோரன்ன அத்தியாவசிய பொருட்களுக்கான இறக்குமதி மூலம் பாரியளவில் நிதி மோசடி செய்தவர்கள் பற்றிய செய்திகளை நாம் அறிவோம். அதுமட்டுமன்றி, பல அமச்சுக்களிலும் பெரிய அளவிலான ஊழல் முறைகேடுகள் இடம் பெற்றுள்ளமையும் மறுப்பதற்கில்லை. அதில் எந்த ஒரு அமைச்சையும் விதிவிலக்கானது என்று வாதிட வேண்டிய எந்தவிதமான அவசியமும் எமக்குக் கிடையாது.
பாரிய ஊழல்களுடன் சம்பந்தப்பட்ட அவ்வாறான ஆட்சியாளர்களுடன் தொடர்புபட்ட கோப்புகளை கட்டுக்கட்டாக சுமந்து வந்து, தேர்தல் அண்மித்த காலங்களில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் மக்கள் மயப்படுத்தினர். தமக்கு அதிகாரம் கிடைக்கும் பட்சத்தில் அந்த மோசடிக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுத்து, அதன் மூலம் பொதுமக்களது பணம் மீளப் பெறப்படும் என்று பிரச்சாரப்படுத்தியே தேசிய மக்கள் சக்தி, தற்போதைய ஆட்சிக்கான மக்கள் ஆணையையும் பெற்றுக்கொண்டது.
ஆனாலும், மக்கள் எதிர்பார்த்ததை விடவும் மந்த கதியிலேயே அதற்கான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அதற்கிடையில் புதிய அமைச்சர்களது ஊழல் சம்பந்தப்பட்ட ரகசியங்களும் கசியத் தொடங்கியுள்ளமையானது பலத்த எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த மக்கள் மத்தியில் இந்த அரசாங்கம் குறித்தும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அனல் மின் நிலையத்துக்கான நிலக்கரி கொள்வனவில் நடைபெற்றதாக கூறப்படும், ஜனாதிபதியின் நண்பரான அமைச்சர் குமார ஜயக்கொடியை சம்பந்தப்படுத்தி வெளிவந்த செய்திகளை உதாரணத்துக்கு குறிப்பிடலாம்.
கடந்த ஆட்சிக் காலங்களில் இடம்பெற்ற நிதி மோசடிகளுக்கு சமாந்தரமாக எதிர்கட்சி சார்ந்த இயக்கங்கள், பல அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கு எதிராக தொழிற்சங்க போராட்டங்களையும் வேலை நிறுத்தங்களையும் நாடளாவிய ரீதியில் நடாத்தி வந்தது பற்றியும் நாம் அறிவோம். ஆனாலும், பல கட்ட பேச்சுவார்த்தைகள் என்ற போர்வையில் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டுவர அதனை முன்னின்று நடத்தியவர்களுடன் திரைமறைவில் எவ்வாறான பரிமாற்றங்கள் நடைபெற்றன என்று காலம் கடந்து கசிந்த செய்திகளை அந்த அப்பாவி ஆர்ப்பாட்டக்காரர்களுள் அதிகமானோர் அறிந்திருக்க மாட்டார்கள்.
வர்த்தக நிறுவனங்களை தமது அறிக்கைகள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலை நிறுத்தங்கள் மூலமும் மறைமுகமாக பதட்டத்துக்குள்ளாக்கி, அதனை வாய்ப்பாக பயன்படுத்தி முறைகேடாக சொத்துக்களையும் நிதியையும் சேகரிக்கும் இவ்வாறான செயல்கள் கூட “செயற்கையான நெருக்கடிகள் மூலம் செல்வம் திரட்டுதல்” என்றே கொள்ளப்படவேண்டும்.
அமைச்சர்கள் மேலே குறிப்பிடப்பட்டது போன்று பங்குச் சந்தை மற்றும் நிதி நிறுவனங்கள் போன்ற இடங்களில் முதலீடு செய்வது அரசியல் அறநெறி சார்ந்த ஒரு பிரச்சினையாகவே பார்க்கப்படுகிறது. அவர்கள் இலங்கை அரசாங்கத்தில் முக்கியமான அமைச்சுகளின் தலைவர்கள். நாட்டில் பொருளாதாரத்தின் தீர்மானமிக்க நகர்வுகள் குறித்து முடிவெடுக்கும் அமைச்சரவை அந்தஸ்த்தும் அதிகாரமும் கொண்டவர்கள். பங்குச் சந்தை போன்ற ஊக வணிகம் (Speculation), அதாவது எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்ற சந்தேகம், பயம், நிச்சயமற்ற தன்மை மற்றும் எதிர்பார்ப்புகளின் அடிப்படையில் பேரம் பேசி லாபம் ஈட்டும் ஒரு சந்தையில், அவர்கள் முதலீட்டாளர்களாக இருப்பது பொருத்தமற்றது. இந்த முதலீடுகள் பாரிய நலன்சார் முரண்பாடுகளை (Conflict of interest) தோற்றுவிக்கும் தன்மைகளை கொண்டவை.
ஏனைய கட்சிகளின் மேல் போலல்லாது, இந்த அரசாங்கத்தின் ஊழலுக்கு எதிரான கொள்கைகளின் மேல் தீர்க்கமான நம்பிக்கை வைத்து தேர்தல் காலங்களில் அதன் வெற்றிக்கான தீவிர பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுத்துச் சென்ற பிரபலங்கள் பலரும் கூட புதிய அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்து கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்; சிலர் மௌனமாகியும் விட்டனர்.
எனவே, தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற முனைப்புடன் செயல்பட வேண்டியதும், நலிவடைந்து செல்லும் நன் நம்பிக்கையை மீளக் கட்டி எழுப்ப வேண்டியதுமான நிர்ப்பந்த நிலைக்கு இந்த அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது. அதன் ஒவ்வொரு நடவடிக்கையும் மக்களால் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டும் வருகிறது.
“தனது முதலாவது சொத்தை சேர்க்கும் வரைக்கும்தான் சோசலிசம்” (Socialism is only until one acquires their first property) என்ற வின்ஸ்டன் சர்ச்சில் கூறியதாக சொல்லப்படும் கூற்றையும், “மற்றவர்களின் பணம் தீரும் வரைதான் சோசலிசம் நீடிக்கும்” (“The problem with socialism is that you eventually run out of other people’s money”) என்ற மார்கரெட் தட்சரின் புகழ்பெற்ற வாசகத்தையும் இந்த அரசாங்கம் பொய்ப்பித்துக் காட்ட வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.



