தரம் குறைந்த நிலக்கரி விநியோக சர்ச்சை – நிலக்கரி விநியோகஸ்தருக்கு வழங்கப்பட வேண்டிய 9 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான கொடுப்பனவுகளை அரசாங்கம் நிறுத்தி வைத்தது – ஏற்பட்ட நஷ்டத்தை விட கூடுதல் தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு எந்த நஷ்டமும் ஏற்படாது என மேலும் தெரிவிப்பு

தரம் குறைந்த நிலக்கரி விநியோகம் காரணமாக, நிலக்கரி விநியோகஸ்தர் ஒருவருக்கு வழங்கப்பட வேண்டிய 9 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான கொடுப்பனவுகளை அரசாங்கம் நிறுத்தி வைத்துள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
குறைந்த தரத்திலான நிலக்கரியால் ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்ட நஷ்டத்தை விட, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தொகை அதிகம் என்றும், இதனால் பொதுமக்களுக்கோ அல்லது அரசாங்கத்திற்கோ நிதி ரீதியான பாதிப்புகள் ஏற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
சக்திசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தனது பதவியை இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, இன்று கொழும்பில் நடைபெற்ற விசேட அரசாங்க ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இத்தைகைய கருத்துக்களை வெளியிட்டார்.
“இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியிலிருந்து குறைந்த அளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இது மின்சாரக் கட்டணத்தில் சேர்க்கப்படாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெளிவாகத் தெரிவித்துள்ளது” என அமைச்சர் கூறினார்.
தரப்பரிசோதனைகளில் தோல்வியடைந்த மூன்று நிலக்கரி கப்பல்களுக்கான 5 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான கொடுப்பனவுகள் இதுவரை வழங்கப்படவில்லை என அவர் தெரிவித்தார்.
“விநியோகஸ்தரிடமிருந்து சுமார் 9.15 பில்லியன் ரூபா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நஷ்டம் சுமார் 8 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்ட போதிலும், நாம் அதைவிடக் கூடுதல் தொகையைத் தக்கவைத்துள்ளோம். எனவே, பொதுமக்களுக்கு எந்த நஷ்டமும் ஏற்படாது” என்று அவர் கூறினார்.
தக்கவைக்கப்பட்டுள்ள இந்த நிதியில் 15 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 4.5 பில்லியன் ரூபா) பெறுமதியான பிணை வைப்புத் தொகையும் (Performance bond) அடங்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.
“ஏற்படும் எந்தவொரு நஷ்டத்தையும் விநியோகஸ்தரே ஏற்க வேண்டும். இது பொதுமக்களையோ அல்லது அரசாங்கத்தையோ பாதிக்காது,” என அவர் கூறினார்.
மேலும், நிர்ணயிக்கப்பட்ட தரத் தரநிலைகளின் அடிப்படையில் அபராதங்கள் விதிக்கப்படுவதாகவும், ஒருமுறை அனுப்பப்பட்ட நிலக்கரியை மீண்டும் திருப்பி அனுப்ப முடியாது என்பதால், இத்தகைய வழிமுறைகள் மூலம் நிதியை மீளப்பெறுவது அவசியம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.



