News

“நிலக்கரி குறித்த கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் சில விடயங்கள் தவறு”..- அமைச்சர் வசந்த

2025-2026 ஆம் ஆண்டிற்கான நிலக்கரி கொள்முதல் செயல்முறை தொடர்பாக கணக்காய்வாளர் நாயகம் சமர்ப்பித்த அறிக்கையில் சில விடயங்கள் தவறானவை என வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

தெரண “360” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அமைச்சர், இந்த கொள்முதல் செயல்முறையில் எவ்வித மோசடியும் இடம்பெறவில்லை என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு என வலியுறுத்தினார். கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள குறைபாடுகள் குறித்து கருத்து தெரிவித்த அவர், ஏல அறிவித்தல் வெளியிடப்படும் போதே நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனை தொடர்பாக கணக்காய்வாளர் நாயகம் எடுத்துள்ள முடிவு தவறானது எனக் குறிப்பிட்டார்.

கொள்முதல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட கடிதத்தின்படி, ஏலங்களை சமர்ப்பிக்கும் போது பதிவு நடைமுறைகளை பூர்த்தி செய்திருந்தால் போதுமானது என அமைச்சர் சுட்டிக்காட்டினார். கணக்காய்வாளர் நாயகம் இந்த உள்நாட்டு ஆவணங்களைப் பரிசீலிக்காத காரணத்தினால் அறிக்கையின் சில பகுதிகள் இவ்வாறு தவறாகப் பதிவாகியுள்ளதாக அவர் கூறினார்.

இந்த கொள்முதல் செயல்முறை தொடர்பாக எழுந்துள்ள வாதப்பிரதிவாதங்களுக்கு மத்தியில், விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரும் செயலாளரும் தமது பதவிகளை இராஜினாமா செய்தது எவ்வித மோசடியும் இடம்பெற்றதனால் அல்ல, மாறாக சுயாதீன விசாரணைக்கு இடமளிப்பதற்காகவே என திரு. சமரசிங்க இங்கு தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் மோசடி மற்றும் ஊழல் தொடர்பில் ‘பூச்சிய சகிப்புத்தன்மை’ (Zero Tolerance) கொள்கையை பின்பற்றுவதாகவும், முன்னெடுக்கப்படவுள்ள விசாரணைகள் மூலம் உண்மை நிலை வெளிப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

நிலக்கரி கொள்முதல் தொடர்பாக கடந்த காலங்களில் காணப்பட்ட சிக்கல் நிலைமைகள் குறித்தும் விளக்கமளித்த அமைச்சர், தற்போதைய கொள்முதல் செயல்முறை முறையான வழிமுறைகளுக்கு இணங்க மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதில் எவ்வித தனிப்பட்ட லாபமோ அல்லது மோசடியோ இடம்பெறவில்லை என்றும் வலியுறுத்தினார்.

Recent Articles

Back to top button