News

எரிசக்தி நெருக்கடியால் இலங்கை பொருளாதாரம் ஆபத்தில்.. 2026 இல் பொருளாதார வளர்ச்சி 3.7% ஆக இருக்கும்.. – பிட்ச் (Fitch)

இலங்கை தனது பருவகால பொருளாதார அடிப்படைகளை வலுப்படுத்தியுள்ள போதிலும், தற்போதைய மத்திய கிழக்கு எரிசக்தி நெருக்கடி காரணமாக அந்த முன்னேற்றம் மீண்டும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக சர்வதேச கடன் தரப்படுத்தல் நிறுவனமான ஃபிட்ச் ரேட்டிங்ஸ் (Fitch Ratings) தெரிவித்துள்ளது.

அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டில் 5.0% ஆக இருந்த இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம், 2026 ஆம் ஆண்டில் 3.7% ஆக குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டில் காணப்பட்ட நிலையைத் தொடர்ந்து, 2026 ஆம் ஆண்டில் நுகர்வோர் விலைச்சுட்டெண் 6% வரை உயரும் என ஃபிட்ச் நிறுவனம் எதிர்பார்க்கிறது. எரிசக்தி செலவுகள் அதிகரிப்பு மற்றும் எரிபொருள் சேமிப்பு நடவடிக்கைகள் இதற்கு முக்கிய காரணமாக அமையும்.

அரசின் அதிக கடன் சுமை மற்றும் வட்டி செலவுகள் காரணமாக இலங்கையின் ‘CCC+’ கடன் தரப்படுத்தல் இன்னும் மட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே உள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கடன் மறுசீரமைப்பிற்குப் பின்னரும், மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் அரச கடன் அளவு உயர் மட்டத்தில் உள்ளதுடன், இது 2027 ஆம் ஆண்டளவில் படிப்படியாக 93% ஆக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை ஒரு நிகர எரிசக்தி இறக்குமதியாளர் என்பதால், ஹோமுஸ் நீரிணை நீண்ட காலம் மூடப்பட்டிருப்பதும், உலக சந்தையில் ஒரு பீப்பாய் எண்ணெயின் விலை 100 டொலர் மட்டத்தில் இருப்பதும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கும் வெளிநாட்டு கையிருப்புக்கும் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. எவ்வாறாயினும், 2022 ஆம் ஆண்டில் நிலவிய நெருக்கடி நிலையுடன் ஒப்பிடுகையில் தற்போது பொருளாதார அடிப்படை வலுவாக உள்ளதால், இம்முறை அழுத்தங்களை முகாமைத்துவம் செய்யும் திறன் அதிகமாக உள்ளதாக ஃபிட்ச் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் திட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதுடன், மே மாத இறுதிக்குள் சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி வசதி கிடைக்கப்பெறவுள்ளது. அத்துடன் ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கி ஊடாகவும் நிதி உதவிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2025 இல் 6.8 பில்லியன் டொலராக இருந்த வெளிநாட்டு கையிருப்பு, 2026 இல் 7.3 பில்லியன் டொலராக உயரும் என ஃபிட்ச் கணித்துள்ளது.

2025 ஆம் ஆண்டில் வெளிநாட்டு பணப்பரிமாற்றங்களில் 23% வளர்ச்சி காணப்பட்டதுடன், 2026 இலும் அது நிலையான மட்டத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘டிட்வா’ (Ditwah) சூறாவளிக்குப் பிந்தைய புனரமைப்புப் பணிகளுக்கான மூலப்பொருள் இறக்குமதி மற்றும் அதிக எரிசக்தி செலவுகள் காரணமாக, 2026 ஆம் ஆண்டில் நடப்புக் கணக்கின் உபரி நிலையானது பற்றாக்குறையாக மாறக்கூடும்.

அரச வருமான சேகரிப்பில் ஏற்பட்ட வளர்ச்சி காரணமாக 2025 ஆம் ஆண்டில் நிதிப் பற்றாக்குறை 2.3% ஆகக் குறைந்த போதிலும், 2026 ஆம் ஆண்டில் செலவுகள் அதிகரிப்பதன் காரணமாக அது 4% ஆக உயரக்கூடும் என ஃபிட்ச் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

Recent Articles

Back to top button