News

இரண்டு வயது பெண் குழந்தையை விற்று மொபைல் தொலைபேசி வாங்கிய குற்றச்சாட்டில் தாய் மற்றும் அவரது துணைவர் (கிளிநொச்சி) தருமபுரம் பகுதியில் கைது

தருமபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இரண்டு வயதுடைய பெண் குழந்தை ஒன்றை 40,000 ரூபாவிற்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் தாயும் அவரது துணைவரும் கைது செய்யப்பட்டுள்ளதோடு, குழந்தையை விலைக்கு வாங்கிய பெண்ணும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


தருமபுரம் கிராம உத்தியோகத்தரினால் வழங்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், கொழும்பு பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு இக்குழந்தை விற்பனை செய்யப்பட்டமை தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.


கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது, தலாசீமியா (thalassemia) நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நான்கு வயதுடைய மூத்த மகளின் மருத்துவச் செலவுகளுக்காகப் பணம் தேவைப்பட்டதாலேயே குழந்தையை விற்றதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், குழந்தையை விற்றுப் பெற்ற பணத்தில் 15,000 ரூபாயைச் செலவிட்டுத் தாய் ஒரு கையடக்கத் தொலைபேசியை (Mobile phone) வாங்கியுள்ளதாகவும், அது குறித்துக் கேட்கப்பட்டபோது சந்தேக நபர்களால் முறையான விளக்கத்தை அளிக்க முடியவில்லை என்றும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.


கைது செய்யப்பட்ட தாயும் அவரது துணைவரும் தருமபுரம் பகுதியைச் சேர்ந்த 27 மற்றும் 31 வயதுடையவர்கள் ஆவர். 

குழந்தையை விலைக்கு வாங்கியதாகக் கூறப்படும் பெண் கட்டுநாயக்க, ஆவரியவத்தை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


கைது செய்யப்பட்ட இரண்டு பெண்கள் மற்றும் ஆண் சந்தேக நபர் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் ஏப்ரல் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button