சுமார் 302 கிலோகிராம் எடையுள்ள பல்வேறு போதைப்பொருட்கள் இன்று புத்தளம் பிரதேசத்தில் வைத்து தீயிடப்படுகிறது

நீதிமன்ற விசாரணைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் (PNB) கைப்பற்றப்பட்ட சுமார் 302 கிலோகிராம் எடையுள்ள பல்வேறு சட்டவிரோத போதைப்பொருட்கள் இன்று (27) அழிக்கப்படவுள்ளன.
பலப்பிட்டிய மற்றும் சிலாபம் நீதிமன்றங்களில் நடைபெற்று வந்த வழக்கு விசாரணைகள் முடிவுக்கு வந்ததையடுத்து, இந்த போதைப்பொருட்களை அழிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டது.
அதன்படி, இன்று காலை பலபிட்டிய நீதவான் நீதிமன்ற வளாகத்திலிருந்து பலத்த பாதுகாப்புடன் இந்த போதைப்பொருள் கையிருப்பு கொண்டு செல்லப்பட்டது.
அதன்படி, ஹெரோயின் 22.88 கிலோகிராம், கேரளா கஞ்சா 33.17 கிலோகிராம், உள்ளூர் கஞ்சா 247.94கிலோகிராம் ஆகியவையே கைப்பற்றப்பட்டு இன்று அழிக்கப்படவுள்ள போதைப்பொருட்கள் ஆகும்.
வெவ்வேறு சுற்றிவளைப்புகளின் போது சான்றுப் பொருட்களாகக் கைப்பற்றப்பட்ட இந்த போதைப்பொருட்கள், புத்தளம் – வனாத்தவில்லு பகுதியில் அமைந்துள்ள ‘லக்டோவத்த’ எரியூட்டியில் வைத்து தகனம் செய்யப்படவுள்ளன.



