தற்போது நடக்கும் அரசியல் சூதாட்டத்திலிருந்து விலகி, கொள்கை அடிப்படையில் நாட்டை கட்டியெழுப்பும் நடுத்தரப் பாதையில் முன்னோக்கிப் பயணிக்கவுள்ள எம்முடன் ஐக்கிய தேசியக் கட்சியின் சகல ஆதரவாளர்களும் இணைந்து கொள்ளுங்கள் என மரியாதையுடன் அழைப்பு விடுக்கிறேன் ; சஜித்

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, நாட்டின் உழைக்கும் மக்களின் உரிமைகளைப் பாதுகாத்து, அனைத்து மக்களுக்கும் சௌபாக்கியத்தை ஏற்படுத்தும் திட்டமொன்றுக்கு முக்கிய அடியை எடுத்து வைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி எதிர்பார்ப்பதாக அதன் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மே தினம் தொடர்பாக இன்று (27) விசேட கூற்றை முன்வைத்து கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இப்போது நடைமுறையில் காணப்படும் காலாவதியான அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, தற்போது நடக்கும் அரசியல் சூதாட்டத்திலிருந்து விலகி, கொள்கை அடிப்படையில் நாட்டை கட்டியெழுப்பும் நடுத்தரப் பாதையில், சமூக ஜனநாயகம் மற்றும் சமூக சந்தைப் பொருளாதாரத்தின் வழியாக முன்னோக்கிப் பயணிக்க நாம் தயார்.
எனவே, இந்தப் பயணத்தில் கைகோர்க்குமாறு ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் சகல ஆதரவாளர்களுக்கும், நாட்டின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் முற்போக்கான சகல மக்களுக்கும் மிகுந்த மரியாதையுடன் அழைப்பு விடுக்கிறேன்.
எதிர்வரும் மே 1 ஆம் திகதி கொழும்பு மாளிகாவத்தை பி.டி. சிரிசேன விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் மே தின கூட்டத்தில் இணையுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்துள்ளார்



