News

பொது நிர்வாகத்தில் ஏற்படும் குழப்ப நிலைகளை தவிர்க்க வெசாக், உழ்ஹிய்யா குறித்த தெளிவானதொரு சுற்றுநிருபத்தை வெளியிடுங்கள்

பொது நிர்வாகத்தில் ஏற்படும் குழப்ப நிலைகளை தவிர்க்க வெசாக், உழ்ஹிய்யா குறித்த தெளிவானதொரு சுற்றுநிருபத்தை வெளியிடுமாறு சமூக நீதிக் கட்சி, பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரிடம் கோரிக்கை!
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

மே 27 – ஜூன் 2 வரையான காலம்  வெசாக் வாரமாக  அரசாங்கத்தினால் கடந்த வாரம் பிரகடனப்படுத்தப்பட்டது. முஸ்லிம்களுடைய புனித ஹஜ்ஜுப் பெருநாளும் இதே வாரத்தில், மே 28 அல்லது 29 இல் வருகிறது. இந்த நிலையில் இதில் ஏற்படக்கூடிய குழப்ப நிலைகள் மற்றும் நாட்டில் அசாதாரணமாக அதிகரித்துள்ள திட்டமிட்ட இனவாத செயற்பாடுகள் குறித்த தெளிவுபடுத்தல்களை சமூக நீதிக் கட்சி பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக இதுகுறித்த தெளிவான சுற்றுநிருபத்தை வெளியிடுமாறு பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன அவர்களிடம் சமூக நீதிக் கட்சி உத்தியோகபூர்வ கடிதமொன்றின் மூலம் இன்று (28.04.2026) கோரிக்கை விடுத்துள்ளது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

“முஸ்லிம்களின் புனித ஹஜ்ஜுப் பெருநாளானது உழ்ஹிய்யா கடமைகளோடு தொடர்புபட்டது. அதே நேரத்தில் வெசாக் தினமானது மிருகங்களை மாமிசங்களுக்காக அறுப்பதிலிருந்து தவிர்ந்துகொள்ள வேண்டிய ஒரு தினமாகக் காணப்படுகிறது. இந்த சட்டமானது ஒட்டுமொத்த வாரத்திற்கும் செல்லுபடியாகும் என்ற பிழையான புரிதல், பொது நிர்வாக அளவில் சில நடைமுறைச் சிக்கல்களை (போயா அல்லாத பெருநாள் வரக்கூடிய மே 28,29 தினங்களில் உள்ளூராட்சி மன்றங்களின் ஊடாக உழ்ஹிய்யாவுக்கு அனுமதி பெற்றுக்கொள்வதில்) ஏற்படுத்த வாய்ப்புள்ளது. கடந்த வருடம் மே 12-16 வரை வெசாக் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டாலும் மே 12,13,14 மட்டுமே இவ்வாறு மிருகங்களை மாமிசங்களுக்காக அறுப்பதை தடைசெய்து பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு சுற்றுநிருபத்தை வெளியிட்டிருந்தது.

ஆகவே அதே போன்று, இம்முறையும், பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் வெசாக் நாட்களான மே 30 மற்றும் மே 31 இதற்குத்தான் இத்தடை செல்லுபடி ஆகும் என்றும் ஒட்டுமொத்த வாரத்திற்கும் இத்தடை செல்லுபடி ஆகாது என்றும் தெளிவானதொரு சுற்றுநிருபத்தை பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டால் வீணான குழப்பங்களைத் தவிர்த்து, இரு சமூகங்களும் தங்களுடைய புனித தினங்களை சுமூகமாக கொண்டாட முடியுமாக இருக்கும்.

ஆகவே இதுகுறித்த தெளிவானதொரு சுற்றுநிருபத்தை வெளியிடுமாறு பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராகிய உங்களிடம் கோரிக்கை விடுக்கிறோம்”.

சமூக நீதிக் கட்சி.
28.04.2026.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button