எமது உரிமையை தீர்மானிப்பது அரசியல் சாசனமா? அன்னிய மத சாசனங்களா? அல்லது தனிநபர்களா?*

இம்முறை ஹஜ் பெருநாள் மற்றும் அதை தொடர்ந்து ஜயாமுல் தஷ்ரீக் தினங்களில் மாடு அறுப்பு சம்பந்தமாக கெபினட் ஊடகவியலாளர் மாநாட்டில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ பின்வரும் கருத்துக்களை கூறினார்
“புத்தசாசன விவகாரங்கள் அமைச்சர் முப்பீட மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து இந்த விடயங்கள் சம்பந்தமாக கலந்துரையாடவுள்ளார். அதன் பின்னரே இது குறித்த அரசாங்கம் தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் ”
இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் தனது மதம் மற்றும் கலாச்சாரத்தைப் பின்பற்றுவதற்கான சுதந்திரம் அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அது யாருடைய தயவிலும் தங்கியிருக்க வேண்டிய ஒன்றல்ல.
ஒருவரது மத அனுஷ்டானங்கள் மற்றுமொருவருக்கு இடையூறாக அமைய முடியாது என்பது சட்டத்தின் அடிப்படையாகும். அதேபோல் ஒரு சமூகத்தின் உரிமைகளைத் தீர்மானிக்கும் அதிகாரம் மதத் தலைவர்களிடம் இல்லை என்பதும் உண்மை.
அப்படியிருக்க… ஒரு சமூகத்தின் அடிப்படை உரிமைகளைத் தீர்மானிப்பதற்கு அரசாங்கம் மகாநாயக்க தேரர்களின் கருத்துக்களுக்காகக் காத்திருக்க வேண்டுமானால்,
📌இந்த நாட்டில் அரசியலமைப்பு எதற்கு?
📌சட்டம் ஒழுங்கு எதற்கு?
📌அரசாங்கம் எதற்கு?
சட்டம் அனைவருக்கும் சமமானது என்றால், எமது உரிமைகளும் அதில் பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டும்!
இலங்கை வரலாற்றில் இதுவரை உத்தியோகபூர்வமாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தவொரு அரசாங்கமும், அரசியலமைப்பை விடவும் மேலானதொரு அதிகார மையத்தை உருவாக்கியதில்லை. அதேபோல், பிரஜைகளின் உரிமைகள் சார்ந்த முடிவுகளை எடுக்க யாரின் தயவையும் எதிர்பார்த்ததும் இல்லை. அப்படி ஒரு நிலை உருவானால், இங்கே சட்டத்திற்கும் நீதிக்கும் என்ன வேலை?
எனது பிரதானமான நிலைப்பாடும் வாதமும் உழ்ஹிய்யா அனுமதி வழங்கப்படுமா இல்லையா என்பது பற்றியது மட்டுமல்ல அந்த அனுமதியை அறிவிக்க அரசாங்கம் கையாளும் தவறான வழிமுறை பற்றியது.
இன்ஷா அல்லாஹ், இந்த அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றேன், ஆனால் அரசாங்கத்தின் அணுகுமுறைக்கு பின்னால் மறைந்துள்ள பாரதூரமான தூரநோக்கு ஆபத்தை எமது சமூகம் உணர வேண்டும்.
அதாவது, மக்களின் ஆணையைப் புறக்கணித்துவிட்டு, சட்டப்படியான வழிமுறைகளைத் தள்ளிவைத்துவிட்டு, அரசாங்கம் அறிந்தோ அறியாமலோ ஒரு புதிய மரபை உருவாக்கப் பார்க்கிறது.
எமது உரிமைகளை நாடாளுமன்றத்தில் பேசித் தீர்ப்பதற்குப் பதிலாக, இன்னொரு மத சாசனத்தின் காலடியில் சென்று கையேந்தி நிற்கும் நிலைக்கு எமது அரசியலமைப்பு வழங்கியுள்ள14-வது பிரிவின் உரிமைகள் தள்ளப்பட்டிருப்பது கவலைக்குரியது.
அரசியலமைப்பு வழங்கிய அடிப்படை உரிமைகளை, மதத் தலைவர்களின் விருப்பத்திற்கு உட்பட்டதாக மாற்றுவது என்பது மிகவும் ஆபத்தானது. என்பதே நான் சுட்டிக்காட்டும் பாரதூரமான உண்மை.
எமது உரிமைகள் கேள்விக்குறியாக்கப்படும் போது, மௌனம் ஒரு தீர்வாகாது!
Wazeer Muhkthar – 🇱🇰


