News

அல் மன்ஹஜுஸ் ஸஹீஹ் விவாதங்கள்.
“நடுநிலையும் நெறிப்பாட்டும் தேடும் ஒரு  சிந்தனை”.

அல் மன்ஹஜுஸ் ஸஹீஹ் விவாதங்கள்.
“நடுநிலையும் நெறிப்பாட்டும் தேடும் ஒரு  சிந்தனை”.

இன்றைய சமூக சூழலில், குறிப்பாக மார்க்க அறிவு, அதன் விளக்கங்கள் மற்றும் அதன் நடைமுறைகள் தொடர்பான விவாதங்கள் அதிகரித்துள்ளன. அவற்றில் “அல் மன்ஹஜுஸ் ஸஹீஹ்” குறித்த உரையாடல்கள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. அறிஞர்களும், பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளும், அதன் பெயர், நோக்கம், மற்றும் உள்நோக்கங்கள் குறித்து நேர்மையான மற்றும் காழ்புணர்ச்சி சார்ந்த பல்வேறு கருத்துக்களையும் ஆய்வுகளையும் முன்வைத்து வருகின்றனர். இது ஒரு சமூகத்தின் இயல்பான வெளிப்பாடாகவே உள்ளது.

ஆனால், எந்தவொரு கருத்தையும் முன்வைக்கும் முன், அதன் மூல ஆதாரங்களை நேரடியாக அணுகுவது என்பது அறிவியல் நெறி மட்டுமல்ல, இஸ்லாமிய நெறிப்பாட்டின் அடிப்படை அம்சமாகவும் திகழ்கிறது. ஒரு நூலை விமர்சிப்பதற்கு முன், அதை முழுமையாக வாசித்து, அதன் உள்ளடக்கத்தை புரிந்து கொண்டு, அதனுடன் தொடர்புடைய உரைகளையும் கவனமாகக் கேட்டு ஆராய்ந்த பின்னர் கருத்து வெளியிடுவது தான் நியாயமானதும் சரியானதுமான அணுகுமுறையாகும். இவ்வாறான அணுகுமுறை இல்லாமல் முன்வைக்கப்படும் விமர்சனங்கள், உண்மையை விட உணர்ச்சிகளால் வெறுப்புகளையும், பிளவுகளையும் பிரதிபலிக்கும் அபாயம் கொண்ட அறியாமை கலந்த நடைமுறையாகும்.

“அல் மன்ஹஜுஸ் ஸஹீஹ்” வெளியீட்டு நிகழ்வை முன்னிட்டு, அதைத் தடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதிதிகளாக அழைக்கப்பட்டிருந்த அரசியல் தலைவர்களுக்கு அழுத்தம் கொடுத்து, அவர்கள் கலந்து கொள்ளாமல் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர்களே கூறுமளவு வெறுப்புணர்வு வெளிப்படுத்தப் பட்டுள்ளது. இது உண்மையில் கருத்து வேறுபாடுகளை அனுகும் முறையில் இன்னும் சம்மந்தப்பட்ட தரப்பினர்  முதிர்ச்சி அடைய வேண்டிய அவசியத்தை வெளிப்படுத்துகிறது.

கருத்து வேறுபாடுகள் என்பது இயல்பு. ஆனால், அதனை எதிர்கொள்ளும் முறை தான் ஒரு சமூகத்தின் நாகரிகத்தையும் அறிவார்ந்த தன்மையையும் அளவிடும் அளவுகோல். ஒரு கருத்தை எதிர்ப்பதற்கான வழி, அதனைத் தடுக்க முயல்வது அல்ல. மாறாக, அதனை அழகிய முறையில் ஆதாரங்களுடனும் நெறிப்பாட்டுடனும் கலந்துரையாடலாக எதிர்கொள்வதே சிறந்த வழியாகும்.

“அல் மன்ஹஜுஸ் ஸஹீஹ்” வெளியீட்டை தடுக்கும் நோக்கில் Review Committee மூலம் பரிசீலித்து அனுமதி வழங்க வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டுள்ளது. சட்டங்கள் உருவாக்கப்படுவது சமூக நலனைக் கருத்தில் கொண்டு தான். ஆனால், அவற்றின் பயன்பாடு சமநிலையுடனும் நீதி உணர்வுடனும் அமைய வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட நூலைத் தடுக்க மட்டும் இந்த நடைமுறைகளை பயன்படுத்த முயல்வது, சட்டத்தின் உண்மையான நோக்கத்தை சிதைக்கும் அபாயத்தை ஏற்படுத்தும். மேலும், இத்தகைய முன்னுதாரணங்கள் உருவாகும் போது, அது எதிர்காலத்தில் வெளிவரவுள்ள அனைத்து நூல்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலையை உருவாக்கும். ஏற்கனவே ஏற்பட்டுள்ள சிக்கல்களால், அல் குர்ஆன் பிரதிகளை பெற்றுக் கொள்வதில்கூட தடைகள் ஏற்பட்ட அனுபவம் உள்ள நிலையில், மேலும் இத்தகைய அணுகுமுறைகள் சமூகத்தில் அச்சத்தையும் குழப்பத்தையும் உருவாக்கும் அறியாமை நிறைந்த முயற்சிகளாகும்.

ஒரு குறிப்பிட்ட பிரச்சினையை முன்வைத்து, அதனை எதிர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் போது, அதன் விளைவுகள் முழு சமூகத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்துமா என்பதை கவனமாக பரிசீலிக்க வேண்டும். ஒரு கருத்து வேறுபாட்டை அனுகும்போது, அதன் தாக்கம் எவ்வளவு பரவலாக இருக்கும் என்பதை உணராமல் செயல்படுவது, நீண்டகால சமூக ஒற்றுமையை பாதிக்கக்கூடும். அதேபோல் இயலுமான விடயங்களில்கூட நம்பிக்கையோடு கைகோர்க்கும் பரஸ்பரநிலை இல்லாமலாகும்.

தங்களை “நடுநிலையாளர்கள்” எனக் கூறிக் கொள்ளும் நபர்கள் மற்றும் குழுக்கள், இத்தகைய சூழ்நிலைகளில் எவ்வாறு செயல்படுகின்றனர் என்பது மிகவும் முக்கியமானது. ஒரு நிகழ்வைத் தடுக்க முயற்சிகள் நடைபெறும்போது, அதனைப் பற்றி எந்த கருத்தையும் வெளியிடாமல் இருப்பது உண்மையான நடுநிலையுமல்ல. வெறுப்பை, பிளவை ஏற்படுத்தும் சந்தேகங்கமான கருத்துக்களை சூட்சுமுமான முறையில் பரவவிடுவது நடுநிலையுமல்ல. உண்மை, நியாயம் எங்கு இருக்கிறதோ அதற்கு ஒத்துழைக்கத் தயங்காது நியாயத்தை தெளிவுபடுத்த முற்படும் நிலைப்பாடே உண்மையான நடுநிலையாகும். நடுநிலமைப் பற்றி அதிகம் பாடம் எடுக்கும் அறிஞர்கள் என்று போற்றப் படுபவர்களிடம்கூட “அல் மன்ஹஜுஸ் ஸஹீஹ்” வெளியீட்டில் இந்நிலை பஞ்சமாகிப் போனமை இவர்கள் தத்தமது நிலைபாடுகளையே உள்ளத்தால் உண்மையாகப் பேசவில்லை என்பதை உணர்த்தியுள்ளது.

“அல் மன்ஹஜுஸ் ஸஹீஹ்”  தனிப்பட்ட நூல் வெளியீட்டு நிகழ்வைத் தாண்டி, நமது சமூகத்தின் சிந்தனை முறை, கலந்துரையாடல் கலாசாரம், மற்றும் நெறிப்பாட்டின் முதிர்ச்சியில்லா தன்மையினை வெளிப்படுத்தியிருக்கிறது. கருத்து வேறுபாடுகள் தொடரும். அது தவிர்க்க முடியாதது. ஆனால், அவற்றை எவ்வாறு கையாளுகிறோம் என்பது தான் முக்கியம். அதற்கான சபைகளுக்கும், அறிஞர்களுக்குமே இவ்வறிவில் வரட்ச்சி நிலவுகிறதாயின் சமூகத்தை வழிநடத்தும் தகுதி வேறெங்கோ மறைந்து நிற்கிறது என்பதே பொருளாகும்.

இறையச்சம், ஆதாரபூர்வமான அணுகுமுறை, திறந்த மனப்பான்மை, மற்றும் சமூக நலனை முன்னிறுத்தும் பொறுப்புணர்வுஇவை அனைத்தும் இணைந்தால்தான், நாம் ஆரோக்கியமான சமூக சூழலை உருவாக்க முடியும். நியாயத்தையும் அறிவையும் அடிப்படையாகக் கொண்ட உரையாடல்களே, சமூகத்தை முன்னேற்றும் உண்மையான பாதையாகும். இதனை உணர்ந்து நடக்கும் உண்மையான தலைமைகளையும், அறிஞர்களையும் வல்லவன் அல்லாஹ் தந்தருள்வானாக.

அறிவாளிகளிடம் மட்டும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன். “அல் மன்ஹஜுஸ் ஸஹீஹ்” நூலை மனம் திறந்து, இறையச்சத்தை முதன்யைப் படுத்தி, நடுநிலையோடு வாசியுங்கள். பின்னர் நீங்கள் கானும் தவறுகளை தாராளமாக சுட்டிக் காட்டுங்கள்.

Abu Sumaiya
NPM. இம்ரான்

அல் மன்ஹஜுஸ் ஸஹீஹ் வெளியீட்டுக் குழு.
ஒருங்கிணைப்பாளர்,
மத்திய மாகாணம்.
03/05/2026

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button