தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) வெற்றியைக் கொண்டாடுவதற்காக யாழ். சென்ற இருவர் விபத்தில் உயிரிழப்பு

யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) வெற்றியைக் கொண்டாடுவதற்காக பட்டாசு கொளுத்தச் சென்றபோது நேரிட்ட கோர விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை (05) அதிகாலை பருத்தித்துறை வீதி, கோப்பாய் நாவற்கட்டைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. அதிவேகமாக சென்ற மோட்டார் சைக்கிள், கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த வீட்டின் மதிலுடன் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த இளைஞர்கள் இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். நெல்லியடிப் பகுதியை சேர்ந்த 22 வயதுடைய சிவநேசன் குஜிந்தன் மற்றும் 24 வயதுடைய ஏழுமலை துஷாந்தன் என்ற இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
குறித்த இருவரும் கரவெட்டி மற்றும் நெல்லியடிப் பகுதிகளில் கடைகளை உடைத்து திருடியமை மற்றும் வீடொன்றில் டொலர் திருடிய குற்ற செயல்களுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



