தாய்நாட்டிற்கு துரோகம் இழைக்காமல் இருப்பதை விடவும், இந்தப் பூமியில் பிறந்த ஒரு மனிதனுக்குப் பெரிய மகிழ்ச்சி வேறொன்றும் இருக்க முடியாது. நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இவர்கள் எனது மக்கள்; மஹிந்த தெரிவிப்பு

“மக்களின் அன்பை விட ஒருவரை மகிழ்ச்சிப்படுத்தும் விஷயம் அரசியலில் வேறெதுவும் இல்லை,” என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவில் சாட்சியமளித்த பின்னர் அவர் இந்தப் பதிவை இட்டுள்ளார். அந்த முகநூல் பதிவில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:
“தமது தாய்நாட்டிற்கு துரோகம் இழைக்காமல் இருப்பதை விடவும், இந்தப் பூமியில் பிறந்த ஒரு மனிதனுக்குப் பெரிய மகிழ்ச்சி வேறொன்றும் இருக்க முடியாது. நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இவர்கள் எனது மக்கள்; மஹிந்தவின் மக்கள். உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். என தெரிவித்துள்ளார் .
ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு 2013ஆம் ஆண்டு 14 ‘ஏயார்பஸ்’ (Airbus) விமானங்களைக் கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் (12) அன்று முன்னிலையானார்.
சுமார் இரண்டு மணிநேரம் ஆணைக்குழுவில் தங்கியிருந்த அவர், வாக்குமூலத்தை வழங்கிவிட்டுச் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
தேசிய விமானச் சேவைக்கு விமானங்களைக் கொள்வனவு செய்த இந்த கொடுக்கல் வாங்கல் மூலம் அரசுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த ஊழல் விவகாரத்தின் முக்கிய சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டுள்ள ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன அண்மையில் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே முன்னாள் ஜனாதிபதிக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டது.
கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் அண்மையில் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களின்படி, மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அவருக்கு 60 மில்லியன் ரூபாய் பணம் வழங்கப்பட்டதை கபில சந்திரசேன ஒப்புக்கொண்டுள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். ஏயார்பஸ் கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புடைய 2 மில்லியன் அமெரிக்க டொலர் தரகுப் பண விவகாரத்தின் ஒரு பகுதியாகவே இந்தப் பணம் வழங்கப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வாக்குமூலம் அளிக்கச் செல்வதற்கு முன்னதாக ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, “அதிகாரிகளிடமிருந்து நியாயமான முடிவை எதிர்பார்க்கிறேன். ஒரு நியாயமான தீர்ப்பு வழங்கப்பட்டால், நான் அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்படுவேன்” எனத் நம்பிக்கை வெளியிட்டார்.
முன்னாள் ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு வளாகத்தைச் சுற்றிலும் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் (STF) குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. அதேவேளை, அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கட்சி ஆதரவாளர்கள் சிலரும் அங்கு கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



