“ஹேக்கர் புகுந்து எமது பணத்தையும் கொள்ளையடித்துள்ளார்” – ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்

ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) சேவைகளை வழங்கும் நிறுவனம் ஒன்றின் மின்னஞ்சல் கணக்கு ஊடுருவப்பட்டு (Hack) மேற்கொள்ளப்பட்ட மோசடியான பணக் கொடுப்பனவு மற்றும் இந்தியாவின் சென்னை நகரில் உள்ள ஶ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அலுவலகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி ஆகிய இரண்டு சம்பவங்கள் தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகள் குறித்து ஶ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் விசேட விளக்கமளிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
சனிக்கிழமையன்று விடுத்துள்ள அறிக்கையில் அந்த நிறுவனம், டுபாயில் உள்ள தனது சேவை வழங்குநர் ஒருவருக்கு செலுத்த வேண்டியிருந்த 974,000 ஐக்கிய அரபு அமீரக திர்ஹாம் (AED) தொகை தங்களுக்குக் கிடைக்கவில்லை என அவர்கள் தமக்குத் தெரிவித்ததாகக் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில், மூன்றாம் தரப்பினர் ஒருவர் சம்பந்தப்பட்ட சேவை வழங்கும் நிறுவனத்தின் மின்னஞ்சல் கணக்கிற்குள் சட்டவிரோதமாக நுழைந்து, அதன் வங்கி கணக்கு விபரங்கள் மற்றும் உறுதிப்படுத்தும் ஆவணங்களை அதிகாரப்பூர்வ தகவல் தொடர்பு வழிகள் ஊடாக மாற்றியமைத்துள்ளமை தெரியவந்துள்ளது. இதன் காரணமாக, மாற்றியமைக்கப்பட்ட அந்த வங்கிக் கணக்கு உண்மையான சேவை வழங்குநருடையது என நம்பி விமான நிறுவனம் குறித்த பணத்தைச் செலுத்தியுள்ளது.
இது குறித்து அறிந்தவுடன் உடனடியாகச் செயற்பட்ட ஶ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், அந்த வங்கிக் கணக்கிற்கு மேற்கொள்ளவிருந்த அடுத்தகட்ட கொடுப்பனவுகளை உடனடியாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், இது தொடர்பாக ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளிடமும், இலங்கையின் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடமும் (CID) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இரு நாடுகளிலும் தற்போது உத்தியோகபூர்வ விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதிகாரப்பூர்வ கையொப்பங்களுடன் கூடிய மின்னஞ்சல் அறிவுறுத்தல்கள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையிலேயே குறித்த பணக் கொடுப்பனவு மேற்கொள்ளப்பட்ட போதிலும், பின்னர் அவை ஊடுருவப்பட்ட கணக்கின் ஊடாக மோசடியாக தயாரிக்கப்பட்டவை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக விமான நிறுவனம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. சேவை வழங்கும் நிறுவனத்தின் மின்னஞ்சல் அமைப்பின் பாதுகாப்பு குறைபாடு காரணமாகவே இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும், அது விமான நிறுவனத்தின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது என்பதால், சேவை வழங்குநருக்கு குறித்த பணம் கிடைக்காததற்கான பொறுப்பைத் தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் ஶ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை, இந்தியாவின் சென்னை நகரில் உள்ள ஶ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அலுவலகத்தின் நிதிப் பிரிவைச் சேர்ந்த ஊழியர்கள் குழுவொன்றினால் நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்டு வந்ததாகக் கூறப்படும் 22 மில்லியன் இந்திய ரூபாய் நிதி மோசடி குறித்தும் அந்த அறிக்கையில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
விமான நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்திய பிரஜைகளான இந்த ஊழியர்கள் குழுவினர், மென்பொதிகள் (Invoices), கொடுப்பனவு விபரங்கள் மற்றும் கையொப்பங்களை போலித்தனமாக தயாரித்து இந்த மோசடியைச் செய்துள்ளனர். கொழும்பில் உள்ள பிரதான அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பின் போதே இந்த முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளதுடன், அதன் அடிப்படையில் உடனடியாக உள்வாரி விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து, சம்பந்தப்பட்ட ஊழியர்கள் பணிக்கு சமூகமளிப்பதைத் தவிர்த்துள்ளதுடன், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து இந்திய சட்ட அமலாக்க அதிகாரிகளிடமும் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், ஏற்பட்டுள்ள நிதி இழப்பை மீட்டெடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் ஶ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மேலும் குறிப்பிட்டுள்ளது.



