39 வேட்பாளர்களில் ரணிலுக்கு இணையான வேட்பாளர் யாரும் இல்லை ; அமைச்சர் பிரசன்ன
அரசியல் அனுபவத்திலும் சர்வதேச உறவுகளிலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இணையான 39 ஜனாதிபதி வேட்பாளர்களில் எவரும் இல்லை என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றி மிகவும் முக்கியமானது என அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்காக மினுவாங்கொடை அலிஸ் பார்க் மைதானத்தில் நேற்று (17) நடைபெற்ற “இயலும் ஸ்ரீலங்கா” ஜனாதிபதி பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரும், நகர அபிவிருத்தி வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க உட்பட கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளினால் இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அங்கு உரையாற்றிய அமைச்சர் பிரசன்ன ரணதுங்க,
எதிர்காலத்தில் நாட்டை கட்டியெழுப்பக்கூடிய தலைவர் நீங்கள்தான். அந்த நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. நாடு வீழ்ந்தபோது, இந்த நாட்டைக் காப்பாற்றுவதற்கு யார் தகுதியானவர் என்று மொட்டுக் கட்சியாகிய நாம் சிந்தித்தோம். அதன்படி இந்த நாட்டைக் காப்பாற்றுவதற்கு மிகவும் பொருத்தமான தலைவர் நீங்கள்தான் என்று தீர்மானித்தோம்.
அதனால் தான் கடவத்தை கூட்டத்தில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உங்களை அழைத்தோம். நீங்கள் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டீர்கள். உங்கள் கட்சியை கைவிட்டு, நாங்கள் அனைவரும் அனைவரும் ஒன்றிணையக்கூடிய ஒரு அரசியல் மேடையை உருவாக்க கடுமையாக உழைத்ததற்கு நன்றி.
நான் எப்போதும் என் தந்தையின் கொள்கைகளை வைத்துத்தான் அரசியல் செய்கின்றேன். நான் எப்போதும் கட்சியை விட நாட்டைப் பற்றியே சிந்தித்தேன். அதனால்தான் உங்களை வெற்றி பெறச் செய்ய நாங்கள் முன்னோடியாக இருந்தோம்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் கம்பஹா மாவட்டத்தில் மூன்றரை இலட்சம் வாக்குகளால் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். இம்முறை கம்பஹா மாவட்டத்தில் இருந்து இன்னும் கூடுதலான வாக்குகளில் உங்களை வெற்றிபெறச் செய்வோம்.
அரசியலில் உங்களுக்கு நிறைய அனுபவம் இருக்கிறது. சர்வதேச தொடர்புகள் பெரியவை. எனவே, இந்த 39 வேட்பாளர்களில் உங்களுக்கு இணையான வேட்பாளர் யாரும் இல்லை. இந்த ஜனாதிபதி தேர்தலில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.அந்த வெற்றி நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஒரு தீர்க்கமான காரணியாகும்.கம்பஹாவிலுள்ள நாங்கள் நாட்டை மீட்பதற்கான உங்களது வேலைத்திட்டத்திற்காக எந்தத் தியாகத்தையும் செய்ய எந்த நேரத்திலும் தயாராக இருக்கிறோம்.உங்கள் வெற்றியின் பெருமை இந்த கூட்ட மைதானத்தில் உள்ள அனைவருக்கும் சொந்தமானது.