“எமது ஒட்டு மொத்த அரசியலையும் NPP யில் கொண்டுபோய் அடமானம் வைக்க முடியாது என்பதிலும் அவதானம் தேவை.”

ஒரே நாட்டவர்களாக பயணிப்பதில் தவறே இல்லை,என்றாலும் எண்ணிக்கையில் குறைந்தவர்களான நாம் “எமது ஒட்டு மொத்த அரசியலையும் NPP யில் கொண்டுபோய் அடமானம் வைக்க முடியாது என்பதிலும் அவதானம் தேவை.”
இந்த நாட்டின் மூன்றாம் சக்தியை உருவாக்குவதில் NPP க்காக 2019 லிருந்து ஆதரவு வழங்கிவருபவன் என்ற அடிப்படையிலும், 2024 ம் ஆண்டு ஜனாதிபதியாக அநுர குமார அவர்களை தேர்ந்தெடுப்பதற்காக பங்களிப்பு வழங்கியவன் என்ற அடிப்படையிலும் இப்பதிவை உரிமையோடு ஆக்கபூர்வமான விமர்சனப்பார்வையில் எழுதலாம் என்று நினைக்கின்றேன்.
எமது இலங்கை அரசியலானது,
* ஊழல் நிறைந்ததாக
,*அரசியல்வாதிகளை எஜமானர்களாக மாற்றி
* சிறுபாண்மை, பெரும்பாண்மை என்ற சில பாகுபாடுகளுடன்
* மாற்ற வேண்டிய அரசியல் கலாசாரத்துடன்
* காலத்திற்கு காலம் வந்த ஆட்சியாளர்களின் நம்பிக்கையீணங்களினாலும்
எமது தேசிய அரசியலில் மூன்றாம் சக்தி ஒன்று கட்டியெழுப்பப்பட்டு வளர்தெடுக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மனோநிலையுடன் இருந்த எமக்கு NPP யின் அரசியல் பிரவேசமானது ஏதோவோர் அடிப்படையில் நமக்கு நம்பிக்கையூட்டுகின்றது என்றிருந்தாலும் உடனடியாக நாம் எமது ஒட்டுமொத்த அரசியலையும் கொண்டுபோய் அடமானம் வைக்க முடியாது என்பதில் சில நியாயங்களும் இருக்கின்றன.
ஏனென்றால் தற்போதய NPP யின் வளரச்சியின் முதல் அங்கமாகவே ஜனாதிபதி ஒருவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார் என்பது மாத்திரம் 100% அடைவு இல்லை. இதன் பின்னர் NPP க்கு ஆதரவான அரசாங்கம் உருவாக்கப்பட வேண்டும் (அதற்கு நாம் ஒத்துழைக்க வேண்டும்) இதனைத் தொடர்ந்து நம்பிக்கையான அரசாங்கச் செயற்பாடுகள் கட்டியெழுப்பப்பட வேண்டும். இதன் தொடர்ச்சியில் சமூக நீதியின் அடிப்படையில் நியாயமான தீர்வுகள் முன்மொழியப்பட்டு பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும். என்ற தொடரான கால ஓட்ட செயற்பாடுகளை அவதானித்து ஒட்டுமொத்த எமது அரசியலையும் NPP யில் நம்பிக்கையுடன் கையளிப்பதில் எவ்வித தவறும் இல்லை என்ற முடிவுக்கு வரலாம்.
இதனாலயே ஜனாதிபதி அனுரகுமார அவர்கள் தனது பதவியேற்பு உரையில் எம்மை ஆதரித்த, ஆதரிக்காத மக்களுக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் எமது செயற்பாடுகள் அமையும் என்ற கருத்தின் அடிப்படையில் குறிப்பிட்டிருப்பதானது இத்தேர்தலில் NPP க்கு வாக்களித்தவர்களாகிய எம்மைப் போன்றவர்களுக்கு இன்னும் வலுவூட்டுகின்ற நம்பிக்கையாகவும் ஆருதலாகவும் இருக்கிறது. இதனால் தொடரான அரசியல் வேலைத்திட்டங்களை அரசியல் பெறுமானத் தீர்மானங்கள் மூலம் அவதானித்து கால ஓட்டத்தில் முடிவுகளை மேற்கொள்வதுதான் மிகப் பொருத்தமான அமையும் என்பது எமது தெளிவுபடுத்தலுமாகும்.
பூகோல அரசியலுடன் இணைந்த இலங்கை அரசியலானது ஆட்சியாளர்களின், ஆளப்படுவோரின் மனோநிலையில் இன்னும் பல மாற்றங்களுடன் பயணிக்க வேண்டிய காலமும் தேவையும் இருக்கிறது. அதனால் ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்ட ஒருவாரத்திலேயே எமது ஒட்டுமொத்த அரசியலையும் NPP யில் கொண்டுபோய் உடனடியாக அடமானம் வைக்க முடியாது என்பதிலும் உணர்ச்சிவசப்படாமல் அறிவுபூர்மாக செயற்பட வேண்டும் என்பதும் எமது புரிதலாகும்.
ஏனென்றால் தற்போது NPP யாக வளரந்து வந்துள்ள JVP க்கு ஏன் இதற்கு முன்னர் இலங்கையின் அரசியலில் ஆளும் அதிகாரம் வழங்கப்பட்டிருக்கவில்லை? அல்லது தற்போது NPP யாக மக்கள் இணைந்து ஏன் செயற்படவிரும்புகிறார்கள்? என்ற வினாக்களுக்கான விடைகளை ஆரவாரமில்லாமல் அவதானித்து பின்பற்றும் வகிபாகத்தை மேற்கொள்ள வேண்டிய அவசியம் எமக்கு இருப்பதாகவே நான் உணருகின்றேன்.
அதனால் இந்த நாட்டின் மூன்றாம் சக்தியாகவும், மாற்றீட்டு அட்சியொழுங்கிலும் NPP வளர்தெடுக்கப்பட வேண்டும் என்பதிலும் எமக்கு எவ்வித மாற்றுக் கருத்துமில்லை. என்றிருந்தாலும் NPP யின் நம்பிக்கை நிறைந்த செயற்பாடுகளை கால ஓட்டத்தில் அவதானித்து எமது அரசியலுக்கான பயணவொழுங்கை திட்டமிட்டுக் கொள்வதுதான் அறிவுபூர்வமானது.
MLM.சுஹைல்



