காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 60 பேர் பலி !
காசாவெங்கும் இஸ்ரேல் நடத்திய கடுமையான தாக்குதல்களில் குறைந்தது 60 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு தெற்கில் கான் யூனிஸ் நகரின் பல பகுதிகளை நோக்கி இஸ்ரேலிய டாங்கிகள் முன்னேறி வருவதாக பலஸ்தீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கான் யூனிஸின் கிழக்கு மற்றும் மத்திய பகுதியில் இஸ்ரேலிய டாங்கிகள் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு கடும் தாக்குதல்களை நடத்தியதை அடுத்து அங்கிருந்து பகுதி அளவு பின்வாங்கி உள்ளன. இதன்போது குறைந்தது 40 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்ததாக பலஸ்தீன வானொலி மற்றும் ஹமாஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.
மறுபுறம் கடந்த செவ்வாய் இரவு தொடக்கம் நடத்திய தாக்குதல்களில் காசா நகரில் குறைந்தது 22 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. இதில் காசா நகரில் உள்ள இடம்பெயர்ந்த மக்கள் தங்கி இருக்கும் பாடசாலை ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 17 பேர் பலியாகி இருப்பதோடு இடம்பெயர்ந்த மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் அல் அமல் அனாதை இல்லத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மேலும் ஐந்து பேர் பலியானதாக காசா மருத்துவ வட்டாரம் கூறியது.
காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்கள் ஆரம்பித்து ஓர் ஆண்டு நெருங்கி இருக்கும் நிலையில் பலஸ்தீன போராளிகள் தொடர்ந்து இஸ்ரேலியப் படையுடன் போரிட்டு வருவதோடு அவ்வப்போது இஸ்ரேல் மீது ரொக்கெட் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். எனினும் இஸ்ரேலின் ‘அயர்ன் டோம்’ வான் பாதுகாப்பு அமைப்பு அவ்வாறான ரொக்கெட் குண்டுகளை இடைமறித்து வருகிறது.