News

பொதுத் தேர்தலின் பின் ஜனாதிபதி இந்தியா செல்வார் – அமைச்சரவை பேச்சாளர்

இந்தியாவுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வதற்காக இந்தியா செல்ல வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளோம். அதற்கமைய அந்நாட்டு அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று பொதுத் தேர்தலின் பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்தியா செல்வார் என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

நேற்று செவ்வாய்கிழமை (15) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு ரஷ்ய ஜனாதிபதி புட்டீனிடமிருந்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதேவேளை இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளுமாறும் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கரால் அழைப்பு விடுக்கப்பட்டது.

எவ்வாறிருப்பினும் பிரிக்ஸ் மாநாட்டில் ஜனாதிபதிக்கு பங்கேற்க முடியாது. தற்போது தேர்தல் என்பதால் ஜனாதிபதியால் மாத்திரமின்றி எம்மாலும் அதில் பங்கேற்க முடியாது. எனவே வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் அதில் பங்கேற்பர். அதேபோன்று தேர்தல் காலத்தில் இந்திய விஜயத்தையும் மேற்கொள்ள முடியாது.

அது மாத்திரமின்றி மூவரால் மாத்திரமே அரச நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன. எனவே பொதுத் தேர்தலின் பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்தியாவுக்கு விஜயம் செய்வார்.

இந்தியாவுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வதற்காக இந்தியா செல்ல வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளோம். எனினும் அதற்கான தினம் உள்ளிட்டவை தொடர்பில் இன்னும் தீர்மானிக்கவில்லை என்றார்.

Recent Articles

Back to top button