முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை காப்பதில் கரிசனை கொள்வோம்
பாராளுமன்ற தேர்தல் என்பது எமது மாவட்டத்திலிருந்து எமக்கான சிறந்த பிரதிநிதிகளை தெரிவு செய்யும் ஒரு தேர்தலாகும். கடந்த ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றிருந்தது. அதன் காரணமாக ஒரு குறித்தளவான முஸ்லிம் வாக்குகள் தே.ம.சக்திக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. இவ்வாறு செல்லும் முஸ்லிம் வாக்குகள் எமது முஸ்லிம் பிரதிநிதித்துவ இழப்பில் பெருமளவு செல்வாக்கு செலுத்தும் என நம்பப்படுகிறது.
தற்போது ” ஊழலை ஒழிக்க வேண்டும், ஊழலற்ற அரசியல் வாதிகளை தெரிவு செய்ய வேண்டும் ” ‘போன்ற கோசங்கள் மேலோங்கியுள்ளன. இந்த கோசங்களின் அடிப்படை அழகியது என்பதில் மாற்றமில்லை. அது தே.ம.சக்தியினூடாக மாத்திரமே சாத்தியமென சிந்திப்பதேன்? இன்றுள்ள எமது அரசியல் வாதிகள் அனைவரும் ஊழல் செய்தவர்களா? நேர்மையான முஸ்லிம் அரசியல் வாதிகளும் எமது சமூகத்தில் உள்ளார்கள் என்பதை மறந்துவிட முடியாது. எமது சமூகத்திற்கு ஏதுமென்றால் இவர்கள் குரல்கள் தான் முன்நிற்கும். மாற்றம் எனும் மாய கோசத்தினுள் இவ்வாறானவர்களை எதிர்ப்பது கிஞ்சித்தேனும் நியாயமாகிவிடாது.
உங்கள் எல்லோருக்கும் மைத்திரியின் ஆட்சி நினைவிருக்கும் என நம்புகிறேன். ” ஞானசாரவை நாய் கூண்டில் அடைப்போம் ” என கூறியே அரியாசனை ஏறியது. இறுதியில் என்ன நடந்தது? அந்த ஆட்சியில் தான் ஞானசார தேரர் உச்ச பலத்தை பெற்றார் என கூறினாலும் தவறாகாது. மைத்திரியின் ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எதிரான எத்தனையோ கலவரங்களை முஸ்லிம் சமூகம் சந்தித்திருந்தது. இதே நிலை இவ் ஆட்சியிலும் ஏற்படாது என உறுதியாக நம்புகிறீர்களா?
ஆட்சியை கைப்பற்ற முன்பு தே.ம.சக்தியினர் IMF உடன் பேசி, அதை செய்வோம், இதை செய்வோம் என்றார்கள். இறுதியில் எதனை செய்துள்ளார்கள் என்பது வெளிப்படையானது. இவ் விடயம் தே.ம.சக்தியினர் கடந்த காலங்களில் சொன்னவைகளை செய்ய முடியாத நிலையில் உள்ளதை தெளிவு செய்கிறது. இவர்கள் எமது விடயத்தில் மாத்திரம் நேர்மையாக செயற்படுவார்கள் என நம்புவது எவ்வளவு மடமையானது. நாளை பல இனவாத செயற்பாடுகள் இடம்பெறலாம்.இவர்கள் மாற்ற போவதாக கூறும் அரசியலமைப்பில் எமது உரிமைகள் கேள்விக்குட்படுமா என்ற அச்சம் மேலோங்கியுள்ளது. இவ்வாறான சந்தர்ப்பங்களின் போதெல்லாம் எமக்காகவே குரல் கொடுத்த நேர்மையான முஸ்லிம் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.
வரப்போகும் தலைவர்கள் கட்சிக்கு அப்பால் சமூகத்திற்காக முன் நிற்க வேண்டும். அப்படியான தலைவர்களையே நாம் தெரிவு செய்யவேண்டும்.
எமது முஸ்லிம் சமூகம் சில மாய கோசங்களுக்குள் அகப்பட்டு எமது நேர்மையான அரசியல் வாதிகளை வீழ்த்த சிறிதும் துணை போக கூடாது என்பதோடு, இத் தேர்தலில் எமது முஸ்லிம் பிரதிநிதித்துவ வீழ்ச்சிக்கு சிறிதும் காரணமாகிவிட கூடாது என்பதில் மிக கவனாக இருத்தல் வேண்டும்.
அஹமட் ரஸான் – கல்கமுவ