வாக்குகளை சிதறடித்து, முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை இல்லாது செய்து எம்மை அரசியல் அநாதையாக்க சதி நடக்கிறது… மக்கள் புரிந்து செயற்படுவது உசிதமானது என்கிறார் ஹலீம்
வாக்குகளை சிதறடிக்கச் செய்து முஸ்லிம்
பிரதிநிதித்துவத்தை இல்லாது செய்ய சதி
மக்கள் புரிந்து செயற்படுவது உசிதமானது என்கிறார் ஹலீம்
முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை இல்லாது செய்து எம்மை அரசியல் அநாதையாக்க கட்சிகளுக்கு உள்ளும் வெளியேயும் சதித்திட்டங்கள் தீட்டப்படுவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்தார்.
அத்தோடு, வாக்குகளை சிதறடிக்கச் செய்வதற்கே முஸ்லிம் மக்கள் அதிகமாக வாழும் பிரதேசங்களில் திட்டமிட்டு வெவ்வேறான அரசியல் கட்சிகளும் சுயேட்சை குழுக்களும் களமிறக்கப்பட்டுள்ளன. இந்த சதி வலைக்கும் முஸ்லிம் சமூகத்திலுள்ள சிலரும் சிக்கிக் கொண்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.
கண்டி, உடுநுவர தொகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின்போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், பிரதான அரசியல் கட்சிகளுக்குள் விருப்பு வாக்கு போட்டிக்காகவும் இன்னோரன்ன காரணங்களுக்காகவும் முஸ்லிம் பிரதிநிதிகளை இலக்கு வைத்து சதித் திட்டங்கள் தீட்டப்படுகின்றன. குறிப்பாக கண்டி மாவட்டத்தில் எமது கூட்டணிக்குள் வேட்பாளர் தெரிவின்போது முஸ்லிம் பிரதிநிதித்துவம் விடயத்தில் நாம் உறுதியாக இருந்தோம். எனினும், திரைமறைவில் பல சதிகள் அரங்கேறின. நீண்டகால உறுப்பினர் என்றவகையில் என்னால் திடமாக இருக்க முடிந்தது. ஆனால், இளம் வேட்பாளர்களை கொண்டுவருவதற்கு பலரும் முட்டுக்கட்டையாக இருந்தனர்.
இது கண்டி மாவட்டத்தில் மட்டுமல்ல எல்லா மாவட்டங்களிலும் எல்லா தேசியக் கட்சிகளிலும் இடம்பெற்றுள்ளன. கண்டியில் சிலிண்டர் அணியில் ஒரேயொரு வேட்பாளரை மட்டுமே உள்வாங்கியிருக்கின்றனர். பாரம்பரிய கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியை சில கடும்போக்கு தரப்பினர் கட்டுப்படுத்துகின்றனர். தேசிய மக்கள் சக்தியும் பலமான முஸ்லிம் வேட்பாளர்களை புறக்கணித்துள்ளன. எனவே, முஸ்லிம் வேட்பாளர்களை சரியாக களமிறக்காது எமது பிரதிநிதித்துவத்தை இல்லாது செய்வதில் குறியாக இருக்கின்றனர்.
இதற்காக சில சுயேட்சைக் குழுக்களும் புதிய புதிய அரசியல் கட்சிகளை கொண்டுவந்து பல வேட்பாளர்களையும் களமிறக்கு வாக்குகளை சிதறடிக்கவும் முயற்சிகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த சதிகளை அறிந்திராத சில முஸ்லிம் அரசியல்வாதிகள் அவர்களின் சதி வலைகளுக்குச் சிக்கியுள்ளனர். இதனால் பாதிக்கப்படப்போவது முஸ்லிம் சமூகம்தான்.
தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் உருவாகியுள்ளது. புதிய அரசியல் மாற்றங்களுடன் நாம் எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுக்க நிர்ப்பந்திக்கப்படவுள்ளோம்.
எனவே, இவர்கள் மேற்கொள்ளும் மாற்றங்களின்போது முஸ்லிம் சமூக உரிமை விவகாரங்களில் தாக்கம் செலுத்தாமல் பக்குவமாக அரசியல் நகர்வுகளை மேற்கொள்வதற்கு அனுபவமுள்ளவர்கள் தேவை என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
அத்தோடு, கடந்த காலங்களில் ஊழல் செய்தவர்களையும் மோசடி செய்தவர்களையும் களவு எடுத்தவர்களையும் நிராகரிக்குமாறு நாமும் கோருகிறோம். மேலும், முஸ்லிம் மக்களை வைத்து நாம் அரசியல் செய்யவில்லை. நாம் பக்குவமாகவே காய் நகர்த்தல்களை மேற்கொள்கிறோம். எமது இருப்புக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக கடந்த கால அரசியல் செயற்பாடுகள் அமைந்ததில்லை. எனவே, எதிர்வரும் தேர்தல் எமக்கு மிகவும் முக்கியமானதொரு தேர்தலாக அமையும் எனவும் அவர் தெரிவித்தார்.