News

செயற்பாட்டு ரீதியிலான அரசியலில் இனி ஈடுபட போவதில்லை

செயற்பாட்டு ரீதியிலான அரசியலில் இனி ஈடுபட போவதில்லை. எந்த அரசியல் கட்சிகளிடமும் வேட்புமனுவை கோரவில்லை. தேசியத்தை முன்னிலைப்படுத்தி செயற்படும் தரப்பினரை ஒன்றிணைக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள விஜயதரணி கட்சி காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

தேசியத்தை முன்னிலைப்படுத்தியே செயற்பட்டேன். எக்காலத்திலும் இனவாத கொள்கையுடன் செயற்படவில்லை.  தேசியத்துக்காகவே குரல் கொடுத்துள்ளேன். இடம்பெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் நான் எந்த தரப்புக்கும் ஆதரவளிக்கவில்லை.

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராக போட்டியிட்ட அநுரகுமார திசாநாயக்கவை பொதுவேட்பாளராக களமிறக்கி தேசிய கொள்கைகளை ஒருமுகப்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டேன். இருப்பினும் தேசிய மக்கள் சக்தி எமது கருத்துகளுக்கு கவனம் செலுத்தவில்லை.

கடந்த அரசாங்கத்தில் பிரதான எதிர்க்கட்சியாக செயற்பட்ட ஐக்கிய மக்கள் சக்தி அரசியலில் முழுமையாக பலவீனமடைந்துள்ளது. தேசியத்தை முன்னிலைப்படுத்தி செயற்பட்ட தரப்பினர்களை ஜனாதிபதித் தேர்தலின் போது ஒன்றிணைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டேன். இருப்பினும் அந்த முயற்சிகள் தோல்வியடைந்தன.

செயற்பாட்டு ரீதியிலான அரசியலில் இனி ஈடுபட போவதில்லை. எந்த அரசியல் கட்சிகளிடமும் வேட்புமனுவை கோரவில்லை. எந்த அரசியல் கட்சிகளுடனும் இனி ஒன்றிணைய போவதில்லை என்றார்.

Recent Articles

Back to top button