News

காத்தான்குடி மக்களிடத்தில் செல்வாக்கிழந்து, பலவீனமடைந்துள்ள ஹிஸ்புல்லா, ஏறாவூர் எல்லைக் கிராமங்களின் வாக்குகளை சூறையாட முயற்சி செய்வதாக குற்றச்சாட்டு

காத்தான்குடியில் பலவீனமடைந்த ஹிஸ்புல்லா ஏறாவூர் எல்லைக் கிராமங்களின் வாக்குகளை சூறையாட முயற்சி: வேட்பாளர் சுபைர் குற்றச்சாட்டு

காத்தான்குடி மக்களிடத்தில் செல்வாக்கிழந்து பலவீனமடைந்துள்ள ஹிஸ்புல்லா ஏறாவூர் எல்லைக் கிராமங்களிலும் பொய்களைக் கூறி வாக்குகளை சூறையாட முயற்சித்து வருகிறார். அவருடைய மோசமான அரசியல் செயற்பாட்டிலிருந்து ஏறாவூர் மண்ணையும் மக்கயையும் பாதுகாப்பதற்கு ஏறாவூரின் சிரேஷ்ட அரசியல் தலைவர்கள் முன்வர வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.

ஏறாவூர் மிச்நகரில் நேற்று (25) இடம்பெற்ற இளைஞர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இம்முறை நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி மட்டக்களப்பு மாவட்டத்தை வென்று இரண்டு ஆசனங்களை பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளது. இந்த தேர்தலில் ஏறாவூரின் சிரேஷ்ட அரசியல் தலைவர்கள் போட்டியிடாத நிலையில் எமதூரின் பிரதிநிதித்துவத்தை தக்கவைப்பதற்கான நல்லதொரு சந்தர்ப்பம் காணப்படுகிறது.

ஹிஸ்புல்லாவின் அரசியல் வங்குரோத்து நிலையை அடைந்ததனால் தான் அவர் இலகுவில் பாராளுமன்றம் செல்லலாம் என நினைத்துக்கொண்டு முஸ்லிம் காங்கிரஸிக்கு தாவினார். அக்கட்சியில் இருந்த ஏறாவூரின் சிரேஷ்ட அரசியல் தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறியதனால் இப்போது ஹிஸ்புல்லாவின் பாராளுமன்ற கனவு கேள்விக்குறியாகியுள்ளது.

தோல்வியில் இருந்து மீள்வதற்காக கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டுவரும் ஹிஸ்புல்லா, ஏறாவூர் ஓட்டமாவடி எல்லைக் கிராமங்களுக்குள் ஊடுருவி தான் வெற்றி பெறுவதாகவும் ஏனையவர்கள் தோல்வியடைவதாகவும் சிறுபிள்ளை போன்று கணக்குகளை காட்டுகின்றார். அவர் மக்களை ஏமாற்றி வாக்கு தேடுகின்ற இந்த போலிப் பிரச்சாரத்தினால் ஓட்டமாவடி இளைஞர்களால் விரட்டியடிக்கப்பட்டார். ஏறாவூர் மக்கள் ஒன்றுபட்டுள்ள நிலையில் இங்கும் வந்து போலிக் கணக்குகளை காட்டி மக்களை ஏமாற்ற முற்பட்டால் ஏறாவூர் மக்களாலும் விரட்டப்படுவார் என நினைக்கின்றேன்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசினை அழிப்பதற்கும் அக்கட்சியின் தலைவரையும் கடந்தகாலங்களில் மிகக்கேவலமாக விமர்சித்து வந்த ஹிஸ்புல்லா இன்று அந்தக்கட்சியினையும் தலைவரையும் புகழ்பாடுவது வேடிக்கையாகவுள்ளது. அவர் அரசியல் அதிகாரத்தில் இருந்த போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் போராளிகளுக்கும் பல்வேறு அநியாயங்களைச் செய்தார். இப்போது கட்சியினதும் தலைவரினதும் விசுவாசியாக மாறியிருக்கிறார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் வளர்ச்சிக்கு உழைத்த ஏறாவூரின் சிரேஷ்ட அரசியல் தலைவர்கள் இன்று அந்தக்கட்சியின் தலைவரால் விரட்டப்பட்டுள்ளனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினதும் ஹிஸ்புல்லாவினதும் போலி அரசியல் செயற்பாடுகள் இந்தப் பிரதேசத்துக்கு ஆபத்தாகும். இது துடைத்தெறியப்பட வேண்டும்.

தரகர்களை வைத்துக்கொண்டு ஏறாவூரை அரசியல் அநாதையாக்க முயலும் ஹிஸ்புல்லா சூழ்ச்சி முறியடிக்கப்பட வேண்டும். பல்லாண்டு காலமாக பாதுக்கப்பட்டு வந்த எமது பிரதிநிதித்துவம் இம்முறையும் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்காக ஏறாவூரின் சிரேஷ்ட அரசியல் தலைவர்கள், உலமாக்கள், கல்வியலாளர்கள், இளைஞர்கள் முன்னினன்று உழைக்க வேண்டும் என்றார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button