News

ஜேவிபியின் கோர முகம் வெளி வருகிறது : தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும் – சுரேந்திரன்

ஜேவிபியின் கடந்த கால கோர முகங்கள் வெளி வரும் நிலையில் தமிழ் மக்கள் சிந்தித்து செயல்பட வேண்டுமென ரெலோ அமைப்பின் ஊடகப் பேச்சாளரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளருமான குருசாமி சுரேந்திரன் தெரிவித்தார்.

நேற்று புதன்கிழமை (30) ஆனைக்கோட்டை சாவல்கட்டுப் பகுதியில் இடம்பெற்ற ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாபெரும் பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறோம் என ஜேவிபியான தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி வேட்பாளர் அனுர மக்களுக்கு வழங்கிய ஆணையை ஆட்சி பீடம் ஏறியதும் மறந்து விட்டார்கள்.

மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறோம் என கூறியவர்கள் மக்கள் எதிர்பார்த்த மாற்றத்தை ஏற்படுத்த முடியாமல் ஜே வி பியின் பழைய கோர முகங்களை காட்ட ஆரம்பித்து விட்டனர்.

தற்போதைய ஜனாதிபதியான அனுரகுமார திசாநாயக்க பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒழிப்பேன் என ஜனாதிபதி வேட்பாளராக பிரச்சாரக் கூட்டங்களில் உறுதி மொழிகளை வழங்கிய நிலையில் தற்போது அவரது அமைச்சரவையில் உள்ள ஒருவர் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க முடியாது என கூறுகிறார்.

இலஞ்சம் ஊழல்களை ஒழிப்போம், கடந்த கால பாரிய ஊழல் மோசடியான மத்திய வங்கி பிணைமுறி மோசடிக் காரர்களை ஆட்சிக்கு வந்ததும் 24 மணித்தியாலத்திற்குள் கைது செய்வோம் என கூறியவர்கள் ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் கடந்த நிலையிலும் கைது செய்யவில்லை.

தற்போது பாராளுமன்ற தேர்தல் இடம்பெற உள்ள நிலையில் பிணைமுறை மோசடி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கண்துடைப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஏற்கனவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நடைபெற்று முடிந்த நிலையில் அதன் அறிக்கைகளை வெளியிடாமல் புதிய விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஜேவிபியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட அனுரா குமார திசாநாயக்க பெரும்பான்மை மக்களின் ஆதரவு இன்றி ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் வாக்களித்த மக்களுக்கு வழங்கிய ஆணைகளை நிறைவேற்ற வேண்டும்.

தமிழ் மக்களுக்கு ஜேவிபி செய்த கொடூரங்கள் இன்னும் மக்கள் மனங்களில் இருக்கின்ற நிலையில் மாற்றம் என்ற போர்வையில் தமிழ் மக்கள் ஏமாறக்கூடாது.

தமிழ் மக்கள் தமது அரசியல் தீர்வுக்காக போராடி வரும் நிலையில் ஜேவிபியான தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் கால பொய் வாக்குறுதிகளுக்கு எடுபட மாட்டார்கள்.

தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற மாற்றம் அரசியல் நீதியான மாற்றமே தவிர தெற்கு அரசியலில் ஏற்பட்ட மாற்றமல்ல.

தற்போது பாராளுமன்ற தேர்தல் நெருங்குகின்ற நிலையில் தெற்கில் இருந்தும் வடக்கில் இருந்தும் தெற்கு விசுவாசிகள் பலர் வருவார்கள் பலதைக் கூறுவார்கள் எவராலும் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற மாற்றத்தை ஏற்படுத்த முடியாது.

ஆகவே தமிழ் மக்கள் தமிழ் தேசியத்துடன் பயணிக்கின்றவர்கள் என்பதை தெற்குக்கும் சர்வதேசத்திற்கும் எடுத்துக்காட்டுவதற்காக தமிழ் தேசியத்தின்பால் பயணிக்கின்ற ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பைப் பலப்படுத்துவதன் மூலம் வெளிக்காட்ட முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Recent Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker