அளவுக்கு அதிகமான அதிகாரம் ஓர் ஆரோக்கியமான ஆட்சியை முழுமையா சிதைத்து விடும்!!!
சென்ற அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி கண்டி ஓக்ரே ஹோட்டலில் நடைபெற்ற “ஒரு அரசியல்வாதியின் வகிவாகவும் சமூகப் பொறுப்புடமையும்” என்ற தொனிப்பொருளின் கீழ் கண்டி மாவட்டத்தின் முக்கியமான பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர்கள் கலந்து கொண்ட ஓர் கலந்துரையாடலின் பொழுது முன்னாள் யட்டினுவர பிரதேச சபை உறுப்பினர் வசீர் முக்தார் ஆற்றிய உரையின் ஒரு பகுதி.
பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையானது எதிர்த்தரப்பினரின் அர்த்தமுள்ள பிரதிவாதங்களை முன்வைப்பதற்கும் அரசு அதிகார அழகுகளில் சமநிலையை பேணுவதற்கும் ஒரு பாரிய சவாலாக அமைந்துவிடும்.
இந்த அளவுக்கு அதிகமான அதிகாரம் ஆட்சியில் அமர்ந்திருப்பவர்களுக்கு தமது இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்கும் தம்மை பலப்படுத்திக் கொள்வதற்கும் தேவையான சட்டங்களை தான்தோன்றித்தனமாக தன்னிச்சை பிரகாரம் நிறைவேற்றிக் கொள்வதற்கான சந்தர்ப்பங்களை வழங்குகின்றது என்பது கடந்த காலங்களின் ஊடாக நாம் கற்றுக்கொண்ட ஒரு பாடமாகும்.
இன்றைய அரசியல் மாற்றத்தின் ஊடாக நாட்டு மக்களுக்கு புதிதான தெளிவில்லாத ஒரு கொள்கையான கம்யூனிச கொள்கையை தமது உறுதியான கொள்கை நெறியாகக் கொண்ட JVP கட்சி ஆட்சி பீடம் ஏறி இருக்கும் சந்தர்ப்பத்தில், மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்பது தமது கொள்கைகளை பாராளுமன்றத்தில் எந்தவிதமான ஆரோக்கியமான விவாதங்களும் இல்லாமல் கருத்து வேறுபாடுகளுக்கான மதிப்பளிக்கப்படாமல் பலாத்காரமாக சட்டமாக்கப்பட்டு சமூகத்தின் மீது திணிப்பதற்கான ஒரு அபாயகரமான சந்தர்ப்பத்தை உருவாக்கி விடும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.
கொள்கை ரீதியாக இடதுசாரிக் கொள்கைகளை தீவிரமாக கடைபிடிக்கக் கூடிய, சமூகத்தின் சிந்தனைகளுக்கும் அபிலாசைகளுக்கும் வளைந்து கொடுக்க பின்வாங்கக் கூடிய ஒரு கட்சியின் மேலாதிக்கம் ஜனநாயகத்தையே குழிபறிக்கும், நல்லாட்சிக்கான முக்கியமான சமநிலையைக்கு பெரும் அச்சுறுத்தலை விளைவிக்கும். வரலாறு நமக்கு மீண்டும் மீண்டும் நினைவூட்டுகின்ற விடையம் என்னவென்றால் அளவுக்கு அதிகமான அதிகாரம் ஓர் ஆரோக்கியமான ஆட்சியை முழுமையா சிதைத்து விடும்!!! என்பதனையே…
Absolute Power Corrupts Absolutely!!
Wazeer Mukthar -🇱🇰