ஹிஸ்புல்லாவின் பணத்துக்கு சோரம்போனவர்களால் ஏறாவூருக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள்… SJB வேட்பாளரின் குற்றச்சாட்டு
ஹிஸ்புல்லாவின் பணத்துக்கு சோரம்போனவர்கள் ஏறாவூரின் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்ய முயற்சி: வேட்பாளர் சுபைர் குற்றச்சாட்டு
ஏறாவூர் வாக்குகளை சிதறடித்து ஊரின் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்கு சிலர் துணைபோயுள்ளதாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் டெலிபோன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரும் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.
ஏறாவூர் மீராகேணி வட்டாரத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஏறாவூர் பிரதேசம் தொடர்ச்சியாக அரசியல் அதிகாரத்தினை தக்கவைத்துக்கொண்டு வருகின்ற ஒரு பிரதேசமாகும். இந்தப் பிரதேசத்தில் சுமார் 33000 வாக்குகள் உள்ளன. ஒரு பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்வதற்குப் போதுமான வாக்குகள் எம்மிடமுள்ளது. எனவே ஊர் ஒற்றுமை படுகின்ற போதுதான் அது சாத்தியமாகும்.
இம்முறையும் ஊருக்கான பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக்கொள்ள மக்கள் ஒற்றுமைப்பட்டுவரும் சூழலில் ஹிஸ்புல்லாவின் பணத்துக்கு சோரம்போன சிலர் ஏறாவூரின் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்கு முயற்சி செய்கின்றனர். இவ்வாறானவர்களுக்கு ஊரின் பிரதிநிதித்துவம் ஊரின் நலன் அபிவிருத்தி தொடர்பில் அக்கரையில்லை. தேர்தல் முடிந்ததும் அவர்களது தனிப்பட்ட தேவைகளை ஹிஸ்புல்லாவிடம் சென்று முடித்துக்கொள்வார்கள். ஆனால் நமதூரின் அபிவிருத்தி உள்ளிட்ட மக்களின் பிரச்சினைகளை யாரிடம் சென்று தீர்ப்பது.
அற்பசொற்ப சலுகைகளுக்காக ஏறாவூர் மக்கள் தங்களது வாக்குகளை ஒருபோதும் இழந்துவிடக் கூடாது. ஏஜென்டுக்களின் ஆசை வார்த்தைகளை நம்பி எமது வாக்குகளை இழப்போமானால் எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்கு அரசியல் அநாதைகளாக இருக்க நேரிடும். அத்துடன் எமது ஊரின் தேவைகளையும் பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு அங்குமிங்கும் அலையவேண்டி ஏற்படும்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்கு இம்முறை சகரும் ஒன்றுபட்டு வாக்களிக்கும் பட்சத்தில் நிச்சயமாக அக்கட்சியூடாக ஏறாவூருக்கான பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்ள முடியும். எனவே ஏறாவூர் பிரதேச உலமாக்கள் கல்வியலாளர்கள் புத்திஜீவிகள் இளைஞர்கள் ஊரின் பிரதிநிதித்துவத்தை தக்கவைப்பதற்கு முன்வர வேண்டும் என்றார்.