ஊழலை ஒழிப்பதாகக் கூறுபவர்கள் ஊழல் குற்றச்சாட்டு உள்ளவர்களுக்கு நியமனம் வழங்குகின்றார்கள் – முன்னாள் எம்.பி இம்ரான்
ஊழலை ஒழிப்பதாகக் கூறி ஜனாதிபதித் தேர்தலில் வென்றவர்;கள் ஊழல் குற்றச்சாட்டு உள்ளவர்களுக்கு நியமனம் வழங்குகின்றார்கள். இது தான் இவர்களது உண்மையான முகம் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளரும், முன்னாள் எம்.பியுமான இம்ரான் மகரூப் தெரிவித்தார்.
திங்கட்கிழமை கிண்ணியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அங்கு உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,
கிழக்கு மாகாண ஆளுநர் சமீபத்தில் 6 தவிசாளர் நியமனங்கள் வழங்கினார். இதில் ஊழல் குற்றச்சாட்டு உள்ளவர்களும் இருக்கின்றார்கள். இதன் மூலம் ஊழலை ஒழிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் இப்போது ஊழலை ஊக்குவிக்கின்றார்கள் என்பது தெளிவாகின்றது. இதனை மக்கள் நன்றாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
இப்போது பாராளுமன்றத்தை ஊழல்வாதிகளிடமிருந்து சுத்தப்படுத்துவதாகக் கூறி வாக்குக் கேட்கிறார்கள். இவ்வாறு வாக்குக் கேட்பவர்கள் முதலில் தாங்கள் தான் சுத்தமாக வேண்டும் என்பதையே கிழக்கு மாகாண ஆளுநரின் நியமனங்கள் எடுத்துக் கூறுகின்றன.
கிழக்கு மாகாண ஆளுநர் நியமனம் வழங்க முடியாதவர்களுக்கு நியமனம் வழங்குகின்றார் அது பேசு பொருளான பின்னர் அந்நியமனத்தை மீளப் பெற்று வேறு ஒருவருக்கு வழங்குகின்றார். எந்த வித நிர்வாக அனுபவமும் இல்லாததன் வெளிப்பாடு தான் இது. பாராளுமன்றத்திற்கும் எல்லா வகையிலும் புதியவர்களை அனுப்பினால் அங்கும் இது போன்ற நிலை தான் ஏற்படும்.
இப்படி ஒரு சூழ்நிலையில் எப்படி இவர்களால் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். வெறும் வாய்ச் சொல் வீரராக இருந்தால் மட்டும் போதாது சரியாகச் செற்படுத்தும் திறனும் இருக்க வேண்டும். இந்த திறன் தற்போதைய ஆட்சியாளர்களிடம் இல்லை என்பதையே இச்சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
கிழக்கு மாகாணத்தில் சுமார் 42 வீதம் முஸ்லிம்கள் வாழ்கின்றார்கள். இந்த வகையில் யோசித்துப் பார்த்தால் குறைந்தது இரண்டு தவிசாளர் பதவிகளுக்கு முஸ்லிம்கள் நியமிக்கப்பட வேண்டும். இது நமது உரிமை. இதனை விட்டுக் கொடுக்க முடியாது. கிழக்கு மாகாண மக்கள் பரம்பலை சரியாக விளங்கியிருந்தால் இது போன்ற பிழைகள் நடக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்காது. நாங்கள் பேச வேண்டிய நிலையும் ஏற்பட்டிருக்காது.
இந்த அரசாங்கம் கிழக்கு மாகாண முஸ்லிம்களை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை என்பது இதிலிருந்து தெளிவாகின்றது. இன்று எம்மில் சிலருக்கு மூளைச் சலவை செய்யப்பட்டுள்ளது. இந்த உரிமை சார்ந்த விடயங்களை நாங்கள் பேசும் போது இனவாதம் பேசுவதாக அவர்கள் சொல்கிறார்கள். இனவாதம் என்பதன் அர்த்தம் என்னவென்று தெரியாதவர்கள் இவர்கள். இவர்களுக்கு முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுவதையிட்டு எந்தக் கவலையும் இல்லை.
முஸ்லிம்களது உரிமைகளை தாரைவார்த்துக் கொடுத்துவிட்டு கைகட்டிப் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் தான் இவர்கள். நமது உரிமைகள் தொடர்பாக இவர்களால் பேசவும் முடியாது. எந்த நடவடிக்கையும் எடுக்கவும் முடியாது. எனவே, நாம் இப்படியானவர்களுக்கா வாக்களிக்கப் போகிறோம் என்பதைக் கவனத்தில் கொண்டு இந்தத் தேர்தலில் நமது வாக்குகளின் மூலம் ஐக்கிய மக்கள் சக்தியைப் பலப்படுத்த முன்வரவேண்டும் என்றார்.