குடித்த சாராயம் விஷமானது – இருவர் உயிரிழப்பு, இருவர் நிலைமை மோசம்
சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட மதுபானத்தை குடித்த 4 பேரில் இருவர் உயிரிழந்துள்ள செய்தியொன்று பிட்டிகல பகுதியில் பதிவாகியுள்ளது.
ஏனைய இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காலி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிட்டிகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மத்தக்க பிரதேசத்தில் வசிக்கும் நபர் ஒருவரின் வீட்டில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த மதுபானத்தை நேற்றிரவு (11) 4 பேர் குடித்துவிட்டு ஒவ்வாமை காரணமாக எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மத்தக்க மாரக்கொட பகுதியைச் சேர்ந்த தர்மபால என்ற 60 வயதுடைய நபரும், ஹெரிசன் விஜேரத்ன என்ற 76 வயதுடைய நபருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
ஆபத்தான நிலையில் உள்ள 64 வயதுடைய நபரொருவர் கராப்பிட்டிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் அவர்தான் மது போத்தலை கொண்டு வந்தவர் என தெரியவந்துள்ளது.
மற்றைய நபர் தற்போது எல்பிட்டிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் ஆபத்தான நிலையில் இருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிட்டிகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்