News

காஸாவில் இஸ்ரேல் “இனப்படுகொலை” செய்கிறது.

மத்திய கிழக்கில், காஸா மற்றும் லெபனானில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில் இஸ்லாமிய மற்றும் அரபு நாடுகளின் தலைவர்கள் சௌதி அரேபியா தலைநகர் ரியாத்தில் ஒன்று கூடியுள்ளனர்.

அப்போது பேசிய சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், காஸாவில் இஸ்ரேலின் தாக்குதல்களை “இனப்படுகொலை” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் லெபனான் மற்றும் இரான் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களையும் அவர் விமர்சித்தார்.

“பாலத்தீன மக்கள் மீது இஸ்ரேல் நடத்திவரும் தொடர் தாக்குதல்கள் மற்றும் லெபனான் மக்கள் மீதும் அந்நாடு தாக்குதலை விரிவுபடுத்த வாய்ப்புள்ள இந்த சூழலில், இவ்வுச்சிமாநாடு நடைபெறுகிறது”, என்று அவர் கூறினார்.

ஆனால் இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை இஸ்ரேல் வலுவாக மறுத்துள்ளது.

மேலும் எதிரியாக இருந்த நாடுகளான இரான் மற்றும் சௌதி அரேபியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே உறவுகளை மேம்படுத்துவதற்கான ஒரு அறிகுறியாக, அவர் இரானில் இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு எதிராக இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

இதற்கு முன்பு, சௌதி அரேபிய ராணுவத்தின் உயர்நிலைக் குழு ஒன்று இரானுக்கு பயணம் மேற்கொண்டது. இது ‘வழக்கத்திற்கு மாறான’ ஒன்றாக கருதப்படுகிறது.

அதேசமயம், சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுடன் இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் பேசியுள்ளார்.

இரான் ராணுவ அதிகாரிகளுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான ராணுவ உறவுகள் குறித்து சௌதி அரேபிய ராணுவத்தின் உயர்நிலைக் குழு கலந்துரையாடியதாக இரான் நாட்டின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சௌதி அரேபிய ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஃபயாத் பின் ஹமீத் அல்-ருவைலி, இரான் ராணுவ தளபதி மேஜர் ஜெனரல் முகமது பகேரியுடன் இரு நாடுகளின் பாதுகாப்பு உறவுகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்துவார் என்று இரான் ராணுவத்தின் செய்தி தொடர்பு துறை தெரிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான நேரடி ராணுவ தொடர்பு 2023-ஆம் ஆண்டு தொலைபேசி மூலம் மட்டுமே நடந்ததால் இரான் ஊடகங்கள் இந்த பயணத்தை ‘வழக்கத்திற்கு மாறான’ ஒன்று என்று குறிப்பிடுகின்றன.

போர்ச் சூழலுக்கு நடுவே நடைபெறும் சந்திப்பு

சௌதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சகம் இந்த பயணம் குறித்த தகவல்களை ‘எக்ஸ்’ சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளது. இரு நாடுகளும் ராணுவம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து பேச்சு வார்த்தை நடத்தவே இந்த சந்திப்பு நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளது.

ஆனால், விஷயம் இது மட்டுமல்ல. கடந்த வெள்ளிக்கிழமை அன்று, ஏமென் நாட்டின் ஹத்ரமவுட் மாகாணத்தில் உள்ள சயூன் நகரில் சௌதி அரேபிய ராணுவ முகாம் மீது நடந்த தாக்குதலில், சௌதி அரேபிய அதிகாரி ஒருவரும், ராணுவ வீரர் ஒருவரும் கொல்லப்பட்டனர். இதில் ஒரு நபரும் காயமடைந்தார்.

ஏமெனில் உள்ள அரசாங்கம் சௌதி அரேபியாவின் ஆதரவை பெரும் அதே வேளையில் ஏமெனில் உள்ள ஹூதி ஆயுதக்குழுவை இரான் ஆதரிக்கின்றது.

ஏமெனில் நடந்த இந்த தாக்குதல் ‘துரோகம் மற்றும் கோழைத்தனமான’ செயல் என்று சௌதி அரேபியா கண்டித்தது.

இரான் அதிபரிடம் சௌதி பட்டத்து இளவரசர் என்ன பேசினார்?

சௌதி அரேபியாவின் குழு இரானுக்குச் சென்றிருந்தபோது, இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை தொலைபேசியில் அழைத்துப் பேசியிருந்தார்.

இந்த அழைப்பில் ஐக்கிய இஸ்லாமிய ஒத்துழைப்பு உச்சி மாநாட்டை பற்றி முகமது பின்னிடம், பெசெஷ்கியன் பேசியதாக சௌதி செய்தி முகமை தெரிவித்துள்ளது.

சொல்லப்போனால், இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்கவே அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள் திங்கட்கிழமை அன்று சௌதி அரேபியாவின் தலைநகர் ரியாத்திற்கு வந்தடைந்தனர்.

இந்த உச்சி மாநாட்டில் தற்போது காஸா மற்றும் லெபனானில் இஸ்ரேல் நடத்தி வரும் போர் குறித்து பேசப்படுகிறது.

இரானின் சார்பாக, துணை அதிபர் முகமது ரெசா ஆரிஃப் இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ளார். இந்த உச்சி மாநாடு வெற்றிகரமாக அமையும் என அதிபர் மசூத் பெசெஷ்கியன் நம்பிக்கை தெரிவித்தார்.

சௌதி அரேபியாவின் அரசு ஊடக முகமையான வஃபா, ” பாலத்தீனம் மற்றும் லெபனான் பகுதிகளில் தற்போது இஸ்ரேல் நடத்தி வரும் மோசமான தாக்குதல் அரபு மற்றும் இஸ்லாமிய நாட்டின் தலைவர்களை உடனடியாக இந்த சந்திப்பு நடத்த கட்டாயப்படுத்தியது” என்று குறிப்பிட்டுள்ளது.

பாலத்தீனம் மற்றும் லெபனான் பகுதிகளில் இஸ்ரேல் படைகளின் தாக்குதலை நிறுத்துவது, அங்குள்ள பொதுமக்களை பாதுகாப்பது மற்றும் அந்த பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட உலக நாடுகளுக்கு அழுத்தம் கொடுப்பது என்பதே இந்த உச்சி மாநாட்டின் முக்கிய நோக்கமாகும்.

கூட்டு ராணுவ பயிற்சி

எதிரி நாடுகளாக இருந்த இரான் மற்றும் சௌதி அரேபியா கடந்த ஆண்டு முதல் நெருக்கமாக நகர தொடங்கின. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேம்படுத்த சீனா மத்தியஸ்தம் செய்தது.

இரான் போராட்டகாரர்கள் டெஹ்ரான் மற்றும் மஷாத் நகரில் உள்ள சௌதி அரேபியா தூதரகங்களை 2016-ஆம் ஆண்டு தாக்கியதில் இருந்து இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் மோசமாக தொடங்கின.

அக்டோபர் மாதத் தொடக்கத்தில், இரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராச்சி ரியாத்துக்கு பயணம் செய்து சௌதியின் பட்டத்து இளவரசரையும் சந்தித்தார்.

அதன்பிறகு இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் சற்று சரிவர தொடங்கின. கடந்த அக்டோபர் மாதம் இரு நாடுகளும் கூட்டு ராணுவப் பயிற்சியை நடத்தியது.

இரான் உட்பட பல நாடுகளுடன் இணைந்து அரபிக்கடல் பகுதியில் சௌதி அரேபியா கடற்படை ராணுவ பயிற்சி மேற்கொண்டதாக, சௌதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.

செங்கடலில் அமையும் புதிய கூட்டணி

இஸ்ரேல் புதிய தகவல் ஒன்றை வெளியிட்ட அதே சமயம் இந்த சந்திப்பு நடந்துள்ளது.

பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஈலாட் வளைகுடாவில் அமெரிக்கா தலைமையில் இஸ்ரேல், ஜோர்டன், எகிப்த் மற்றும் சௌதி அரேபியா போன்ற நாடுகளை உள்ளடக்கிய ஒரு புதிய கூட்டணி அமைக்கப்படும் என இஸ்ரேல் தெரிவித்தது.

கப்பல் போக்குவரத்து, எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறுகள் மற்றும் உத்தி ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த சொத்துக்களை இரானின் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாப்பதே, செங்கடலில் இந்த ராணுவ ஒத்துழைப்பின் நோக்கம் என ஞாயிற்றுக்கிழமை அன்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இரான் மற்றும் அதன் கூட்டணி நாடுகள், இராக் மற்றும் ஏமெனில் கொடுக்கும் அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள இந்த ‘பிராந்திய பாதுகாப்பு கூட்டணி’ உருவாக்கப்பட்டது என்று இஸ்ரேல் செய்தி இணையதளமான ‘ஜமானே இஸ்ரேல்’ செய்தி வெளியிட்டுள்ளது.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

Recent Articles

Back to top button