66 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த ஆணும் பெண்ணும் கைது
கஹதுடுவ, சியம்பலாகொட பிரதேசத்தில் நேற்று (16) மாலை 66 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண் 42 வயதுடையவர் எனவும், சந்தேகநபர் 38 வயதுடையவர் எனவும், அவர்கள் சியம்பலாகொட பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபரான பெண் சிங்கப்பூர், ஹொங்கொங், டுபாய் மற்றும் ருமேனியா ஆகிய நாடுகளில் பணியாற்றிய பின்னர், கடந்த 2022ஆம் ஆண்டு இந்த நாட்டுக்கு வருகைத்தந்து சந்தேக நபருடன் இந்தப் பகுதியில் வசித்து வந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர்கள் சுமார் இரண்டரை வருடங்களாக பல்வேறு நபர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி, அந்த நபர்களின் கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பின்னர், முகவர் நிறுவனங்கள் ஊடாக விசாவுக்கு விண்ணப்பித்து, வேலைக்கான நேர்முகத்தேர்வுக்கு அழைப்பதாக கூறி, குறித்த நபர்களிடம் இருந்து 02 முதல் 03 இலட்சம் ரூபாய் வரை பணம் பெற்று, அந்த கடவுச்சீட்டுக்களை தம்மிடம் வைத்திருந்தனர்.
சந்தேகநபர்கள் தங்கியிருந்த வீட்டை சோதனையிட்ட போது, 20 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கஹதுடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.