News

அனர்த்தத்தின் போது களத்தில் இயங்கிய மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி சங்கத்தினரையும் அவர்களுக்கு உதவியாக இருந்தவர்களையும் அழைத்து பாராட்டுமாறு ஜனாதிபதிக்கு கடிதம்

மாளிகைக்காடு செய்தியாளர்

அம்பாறை மாவட்டம் காரைதீவு-மாவடிப்பள்ளி பகுதியில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போனவர்களில் ஐவரை உயிருடனும், 08 சடலங்களையும் மீட்க ஐந்து நாட்களாக போராடிய மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பும் அவர்களுடன் இணைந்து அவர்களுக்கு பக்கபலமாக நின்று தேடுதல் நடவடிக்கைக்கு உதவிய காரைதீவு இராவணா இளைஞர்கள் அமைப்பினருக்கும் மற்றும் சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையினருக்கும் ஜனாதிபதி, பிரதமர், அனர்த்த முகாமைத்துவ அமைச்சு, அம்பாறை அரசாங்க அதிபர், சம்மாந்துறை முச்சபை என்பன நேரடியாக அழைத்து கௌரவித்து உட்சாகப்படுத்த வேண்டும் என அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்கா கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளது.

அந்த கோரிக்கையில், காரைதீவு – மாவடிப்பள்ளி பகுதியில் உழவு இயந்திரத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த மதரஸா மாணவர்கள் உள்ளிட்ட பலர் வௌ்ளத்தில் சிக்கி காணாமல் போகியிருந்த நிலையில் அன்றையதினம் மாலை தேடுதல் நடவடிக்கையின் போது 5 மாணவர்கள் வெள்ளத்தில் இருந்து காப்பாற்றப்பட்டனர். இந்த மீட்புப்பணியில் பாதுகாப்பு படையினரும் இணைந்திருந்த போதிலும் இவ்வாறான சிவில் அமைப்புக்களின் பங்களிப்பு பாராட்டத்தக்கதாக இருந்ததை நாம் இங்கு அடிகோடிட்டு காட்ட வேண்டியுள்ளது.

மீட்புப் படையினரின் தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து ஐந்தாவது நாளாக இடம்பெற்று வந்தது. அதன்போது நிந்தவூர் காஷிபுல் உலூம் அறபுக் கல்லூரி மாணவர்களின் 06 ஜனாசாவும், வாகன சாரதியின் ஜனாஸாவும், இன்னும் ஒரு இளைஞரின் ஜனாஸாவுமாக மொத்தம் 08 ஜனாஸாக்கள் மீட்புப்பணியாளர்களினால் மீட்கப்பட்டு சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த ஐந்து நாட்களும் பல்வேறு அசௌகரியங்களுக்கு மத்தியில் இவர்கள் முன்னெடுத்த பணியை பாராட்டி கௌரவிக்க வேண்டிய பொறுப்பு இலங்கையர்களாகவும், மனிதாபிமானிகளாகவும் நமக்கு இருப்பதாக நம்புகிறோம். இவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக இதனை துரிதகதியில் முன்னெடுக்க தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

UMAR LEBBE NOORUL HUTHA UMAR

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button