புதிய அரசியலமைப்பியில் சிறந்த தீர்வு நடைமுறைப்படுத்தப்படும் வரை 13 ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்படாது.

புதிய அரசியலமைப்பியில் சிறந்த தீர்வு நடைமுறைப்படுத்தப்படும் வரை 13 ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்படாது. அது தொடர்பில் சகல தரப்பினருடனும் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என்றே நான் கூறினேன்,மாறாக மாகாண சபை முறை எவ்வித கலந்துரையாடல்களுமின்றி ஒழிக்கப்படும் என நான் ஒருபோதும் கூறவில்லை என ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஊடகமொன்றில் மாகாண சபை முறைமை தொடர்பில் ரில்வின் சில்வா கூறியதாக வெளியான செய்தி நாட்டில் பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்த நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் டில்வின் சில்வா மேலும் தெரிவிக்கையில்;
வடக்கு மக்களின் சிக்கல்களைத் தீர்த்துவைக்க 1987இல் கொண்டுவரப்பட்ட 13ஆவது திருத்தம் தவறியுள்ளது. அதனால் வடக்கு மக்களின் சிக்கல்களைத் தீர்த்துவைக்க மிகவும் நடைமுறைச்சாத்தியமானதும் சரியானதுமான தீர்வினை முன்வைக்க வேண்டியுள்ளது. அத்தகைய மிகச்சிறந்த தீர்வினை முன்வைத்து நடைமுறைப்படுத்தும்வரை 13 ஆவது திருத்தத்தையும் மாகாண சபைகளையும் ஒழிக்கப்போவதில்லை என்றே நான் கூறினேன்.
மேற்படி புதிய தீர்வுகள் எதிர்காலத்தில் கலந்துரையாடலுக்கு இலக்காக்கப்படுகின்ற அரசியலமைப்பில் உள்ளடக்கப்படும். அந்த தீர்வு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினர்களினதும் கருத்துக்கள் மற்றும் முன்மெழிவுகளை அடிப்படையாகக் கொண்டே தயாரிக்கப்படும். எனது செய்தி திரிவுபடுத்தப்பட்டுள்ளது.” என்றும் அவர் கூறியுள்ளார்.

