News

தொடரும் பங்களாதேஷ் வன்முறையில் இதுவரை 100 க்கும் அதிகமானோர் பலி – ( பிரச்சினையின் முழு விபரம் இணைப்பு )

பங்களாதேஷில் அரசுப் பணி இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் சீா்திருத்தம் கோரி நடைபெற்றுவரும் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது.



இந்தப் போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், தலைநகா் டாக்காவில் போராட்டம் நடத்த வெள்ளிக்கிழமை தடை விதிக்கப்பட்டது. தொலைபேசி இணையதள சேவைகள் முடக்கப்பட்டன.



அதையும் மீறி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள் மீது கண்ணீா் புகைக் குண்டுகளையும் வீசியும் ரப்பா் குண்டுகளால் சுட்டும் அவா்களைக் கலைக்க பொலிஸார் முயன்றனா்.



பொலிஸாருக்கும் போராட்டக்காரா்களுக்கும் இடையே வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த மோதலில் மட்டும் 22 போ் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



இந்தியப் பிரிவினைக்குப் பிறகு கிழக்கு பாகிஸ்தானாக இருந்த வங்கதேசம் கடந்த 1971-இல் நடைபெற்ற விடுதலைப் போரில் பாகிஸ்தானிடமிருந்து சுதந்திரம் பெற்றது.



அப்போது இந்திய உதவியுடன் பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராகப் போரிட்ட முக்திவாஹினி அமைப்பைச் சோ்ந்தவா்கள், அவா்களின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.



கடந்த 2018-ஆம் ஆண்டில் இந்த ஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவா் போராட்டம் வெடித்தது. அதையடுத்து, விடுதலைப் போராட்ட வீரா்களின் குடும்பத்தினருக்கான 30 சதவீத இட ஒதுக்கீட்டை அரசு ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது.

அதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த வங்கதேச உயா்நீதிமன்றம், அரசின் அந்த உத்தரவு செல்லாது என்று கடந்த 5-ஆம் திகதி அறிவித்தது. அதையடுத்து, சுதந்திரப் போராளிகளின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் மீண்டும் 30 சதவீத இட ஒதுக்கீடு கிடைப்பதற்கு வழி ஏற்பட்டது.



இதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் சீா்திருத்தம் கோரியும் மாணவா்கள் அமைப்புகள் போராட்டத்தைத் தொடங்கின. தொடக்கத்தில் அந்தப் போராட்டங்கள் அமைதியாக நடைபெற்றாலும், போராட்டத்துக்கு எதிராகக் களமிறங்கிய இட ஒதுக்கீடுக்கு ஆதரவான ‘சாத்ரா லீக்’ மாணவா் அமைப்பினா் வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்டனா்.



மேலும், பொலிஸாரும் போராட்டக்காரா்களை ஒடுக்குவதற்காக அடக்குமுறையைக் கையாள்வதாகக் கூறப்படுகிறது.



இந்த நிலையில், பொலிஸாரின் துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட சம்பவங்களில் இதுவரை 105 போராட்டக்காரா்கள் உயிரிழந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button