ஜனாதிபதி தேர்தலுக்கான தீர்க்கமான திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு விரைவில் அறிவிக்க வேண்டும்.
– நஜா முஹம்மத்,
தலைவர், சமூக நீதிக் கட்சி.
ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வமான அறிவிப்பை வெளியிடும் அதிகாரம் கடந்த 16 ஆம் திகதி முதல் தேர்தல் ஆணைக்குழுவின் கைகளுக்கு சென்றிருக்கிறது. ஆனாலும் தேர்தல் ஆணைக்குழு, ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பை இந்த மாத இறுதியில் தான் வெளியிடுவதாக அறிவித்துள்ளது.
ஏற்கனவே தேர்தலை பிற்போடுவதற்கான பல குறுக்கு வழிகளில் ரணில் விக்கிரமசிங்க மும்முரமாக ஈடுபடுகிறார். ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனு மற்றும் தேர்தலைப் பிற்போடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு போன்ற தோல்வியடைந்த யுக்திகளுக்கு பின்னால் யார் இருக்கிறார் என்று எல்லோருக்கும் தெரியும்.
தற்பொழுது 22 ஆம் திருத்தச் சட்டத்தை கெபினட்டில் சமர்பித்து, நீதியமைச்சர், இது குறித்த வர்த்தமானி அறிவித்தலை தேர்தலின் பின்னர் வெளியிடலாம் என்று கூறியும் ரணில் தனது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
22 ஆம் திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற பாராளுமன்றில் 2/3 பெரும்பாண்மை பெற வேண்டும் மற்றும் சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும். ஆகவே ரணில் விக்கிரமசிங்க, சர்வஜன வாக்கெடுப்பைப் பயன்படுத்தி ஜனாதிபதித் தேர்தலிலைப் பிற்போடும் கடைசி முயற்சிக்கு பின் கதவால் இறங்கியுள்ளார்.
19 ஆம் திருத்தத்தின் போது அசரியலமைப்பானது சரியாகத் திருத்தப்படாவிடினும் ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள் தான் என்று உயர்நீதிமன்றம் ஏற்கனவே பல இடங்களில் தனது தெளிவான அபிப்பிராயத்தைத் தெரிவித்துவிட்டது.
ஆகவே 22 ஆம் திருத்தச் சட்டம் என்பது தேவைமில்லாத ஒன்று. இதனை வைத்து தேர்தலைப் பிற்போட முயற்சிப்பதையோ மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதையோ விட்டுவிட்டு ரணில், முறையாக தேர்தலை எதிர்கொள்ள முயற்சிக்க வேண்டும்.
இந்த இடத்தில் தேர்தல் ஆணைக்குழு, ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வமான திகதியை உடனடியாக அறிவித்து, இத்தகைய நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். தேர்தல் ஆணைக்குழு தைரியமாக இவற்றை எதிர்கொண்டு துரித நடவடிக்கை எடுக்காவிட்டால், இத்தகைய சித்துவிளையாட்டுக்கள் தொடர்ந்த வண்ணமே இருக்கும்.
மக்கள் தமது ஜனநாயகக் கடமையை ஆற்ற தேர்தலொன்றை எதிர்பார்த்துள்ள இச்சூழ்நிலையில், தேர்தல் ஆணைக்குழுவானது துரிதமாக செயற்படாவிடின், அது மக்களின் ஜனநாயக உரிமையைப் பாதிப்பதோடு, தேர்தல் ஆணைக்குழு மீதான நம்பிக்கையை மக்கள் இழக்கவும் அது வழிவகுக்கும்.